உலக கால்பந்து தரவரிசை: பிரான்ஸ் அணி முதலிடத்திற்கு முன்னேற்றம்
ரஷியாவில் கடந்த மாதம் நிறைவடைந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை தோற்கடித்து 2-வது முறையாக மகுடம் சூடியது.
இந்த போட்டிக்கு பிறகு முதல்முறையாக கால்பந்து அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) நேற்று வெளியிட்டது. முன்பு, குறிப்பிட்ட காலத்தில் வெற்றி-தோல்விகளின் சராசரி புள்ளி கணக்கிடப்பட்டது. ஆனால் தற்போது நேரடியாக வெற்றி தோல்விக்குரிய புள்ளிகள் சேர்க்கப்படும் அல்லது கழிக்கப்படும். இந்த புதிய முறைப்படி வெளியான தரவரிசை பட்டியலில் 7-வது இடத்தில் இருந்த பிரான்ஸ் அணி, உலக சாம்பியன் பட்டத்தை வென்றதன் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறியுள்ளது.
அதே சமயம் இதுவரை ‘நம்பர் ஒன்’ இடத்தில் இருந்த 2014-ம் ஆண்டு சாம்பியனான ஜெர்மனி 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த உலக கோப்பையில் ஜெர்மனி அணி லீக் சுற்றை தாண்டவில்லை. 80 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக லீக் சுற்றுடன் வெளியேறியதன் விளைவு தரவரிசையிலும் எதிரொலித்து இருக்கிறது.
இந்த உலக கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்தி 3-வது இடம் பிடித்த பெல்ஜியம் அணி ஒரு இடம் உயர்ந்து 2-வது இடத்தை பெற்றுள்ளது. முதல்முறையாக இறுதி சுற்றை எட்டி அனைவரையும் வியக்க வைத்த குரோஷியா 20-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கு வந்துள்ளது. இதே போல் அரைஇறுதியை எட்டிய மற்றொரு அணியான இங்கிலாந்து 6 இடங்கள் ஏற்றம் கண்டு 6-வது இடத்தையும், உருகுவே 9 இடங்கள் எகிறி 5-வது இடத்தையும் பெற்றுள்ளன. அதே சமயம் முன்னாள் சாம்பியன்கள் பின்னடைவை சந்தித்து இருக்கின்றன. பிரேசில் அணி ஒரு இடம் சரிந்து 3-வது இடமும், அர்ஜென்டினா 6 இடங்களை இழந்து 11-வது இடமும் வகிக்கின்றன. இதே போல் போர்ச்சுகல் 7-வது இடத்திலும் (3 இடம் சறுக்கல்), ஸ்பெயின் 9-வது இடத்திலும் (ஒரு இடம் ஏற்றம்), சுவீடன் 13-வது இடத்திலும் (11 இடம் உயர்வு) உள்ளன.
முதல்முறையாக உலக கோப்பை போட்டியை நடத்திய ரஷியா அச்சமயம் தரவரிசையில் 70-வது இடத்தில் இருந்தது. ஆனால் ஆச்சரியப்படத்தக்க வகையில் கால்இறுதி வரை முன்னேறிய ரஷியா இப்போது தரவரிசையில் 49-வது இடத்தை எட்டிப்பிடித்துள்ளது. இந்திய அணி ஒரு இடம் அதிகரித்து 96-வது இடம் வகிக்கிறது.