கடிகார மனிதர்கள்
கிஷோரும், லதாராவும் கணவன்-மனைவி. ஏழை தம்பதிகள். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள். கிஷோர் சைக்கிளில் சென்று, ‘பேக்கரி’ தொழில் செய்யும் கூலி தொழிலாளி. அதில் கிடைக்கும் பணத்தின் மூலம் வீட்டு வாடகை கொடுத்து, குழந்தைகளை படிக்க வைத்து, குடும்பம் நடத்த வேண்டிய சூழ்நிலை. கிஷோர் அவசரமாக தன் குடும்பத்துக்காக, வாடகைக்கு வீடு தேடுகிறார்.
“கணவன்-மனைவி, 2 குழந்தைகளை கொண்ட சின்ன குடும்பத்துக்கே வாடகைக்கு வீட்டை தருவேன்” என்று வீட்டின் உரிமையாளர் பாலாசிங் கூறுகிறார். கிஷோர் தனக்கு 3 குழந்தைகள் என்பதை மறைத்து, 2 குழந்தைகள்தான் என்று பொய் சொல்லி, அந்த வீட்டில் குடியேறுகிறார். ஒரு மகனை தனது ‘பேக்கரி’ பெட்டிக்குள் மறைத்து வைத்து, தினமும் பயந்து பயந்து வாழ்க்கை நடத்துகிறார்.
சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது அவருடைய நீண்ட கால கனவாக இருக்கிறது. அவருடைய கனவு நிறைவேறியதா, இல்லையா? என்பதே படத்தின் கதை.
ஒரு ஏழை குடும்ப தலைவன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார், கிஷோர். தனக்கு மூன்று குழந்தைகள் என்பதை மறைத்து, 2 குழந்தைகள்தான் என்று பொய் சொல்லி, பாலாசிங் வீட்டுக்கு குடிவரும் காட்சியில் அவர் மீது ஏற்படும் அனுதாபம், படம் முழுக்க தொடர்கிறது. கிஷோரின் மனைவியாக லதாராவ், ஏழை குடும்ப தலைவியாகவே மாறியிருக்கிறார்.
பாலாசிங்கின் மகள் ஷெரினை காதலிக்கும் கருணாகரன், வீடு பிடித்து தரும் தரகராக சிசர் மனோகர், பாலாசிங்கின் கெடுபிடியை பார்த்து அவருடன் சண்டை போடும் பாவா லட்சுமண் ஆகியோர் அந்தந்த கதாபாத்திரங்களாக மனதை தொடுகிறார்கள்.
உமா சங்கரின் கேமரா, நடுத்தர ஏழை குடும்பங்களின் அசவுகரியங்களை உயிரோட்டமாக பதிவு செய்து இருக்கிறது. இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பின்னணி இசை மூலம் கதைக்குள் ஒன்ற வைக்கிறார். வைகறை பாலன் டைரக்டு செய்திருக்கிறார். திரைக்கதை எந்த திருப்பங்களும் இல்லாமல், மிக இயல்பாக-மெதுவாக நகர்கிறது. ஒரு ஏழை குடும்ப தலைவன், எந்த முன்னேற்றமும் இல்லாமல், முடிந்து போகிற ‘கிளைமாக்ஸ்’சை மாற்றியிருக்கலாம். விருதை குறிவைத்து எடுத்த படம் போல் தோன்றுகிறது.