கேரள வெள்ளசேதம் மனிதனால் ஏற்பட்ட பேரழிவு: சுற்றுசூழல் நிபுணர் மாதவ் காட்கில்
கேரளாவில் கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு தென்மேற்கு பருவ மழை கொட்டி தீர்த்து வருகிறது. இடைவிடாது பெய்த பேய்மழையால் கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளா நிலைகுலைந்தது. மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன.
இதுவரை மழைவெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 164 பேர் பலியாகி இருப்பதாக அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 14-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ள நீரில் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் உள்ள 39 அணைகளில் 35 அணைகள் நிரம்பித் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாநிலத்தின் பெரும்பகுதி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து முப்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் கேரள மாநிலத்தின் வெள்ளசேதம் மனிதனால் ஏற்பட்ட பேரழிவு என மேற்குத்தொடர்ச்சி மலைகளின் சுற்றுசூழல் நிபுணர் குழு தலைவர் மாதவ் காட்கில் கூறியுள்ளார். பருவநிலை மாற்றத்தால் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், புவியியல் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்திய அரசுக்கு பரிந்துரை செய்யவும், மத்திய அரசு பேராசிரியர் மாதவ் காட்கில் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை 2010 ஆம் ஆண்டு நியமித்தது. இந்தக்குழு தனது அறிக்கையை கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ந் தேதி சமர்பித்தது. அறிக்கையில் 140,000 கி.மீ. பரப்புள்ள மேற்குத்தொடர்ச்சி மலைகளை மூன்று மண்டலங்களாக பிரிக்க குழு பரிந்துரைத்தது. மலையில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும், மணல் குவாரிகள், சுரங்க பணிகள் தடைசெய்யவேண்டும், காடுகள் அழிக்கப்படுவதை தவிர்க்க மலைப்பகுதிகளில் கட்டுமானங்கள் கூடாது எனக் குழு சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.
இதனிடையே மாதவ் காட்கில் குழு அளித்த அறிக்கையை நிராகரித்த கேரள அரசாங்கம், அறிக்கை வெளியிட்டுள்ள பரிந்துரைகளை ஏற்க போவதில்லை என அறிவித்தது. இந்நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பேரழிவு குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்து மாதவ் காட்கில் கூறுகையில், ”பொறுப்பற்ற சுற்றுசூழல் கொள்கையால் கேரள மாநிலத்தில் வெள்ள சேதம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இது மனிதனால் ஏற்பட்ட பேரழிவு ஆகும். மக்கள் மற்றும் சுற்றுசூழலை பாதுகாக்க எங்கள் குழு அப்பொழுதே மத்திய அரசிடம் அறிக்கை ஒன்றை தயார் செய்து அதை ஏற்க பரிந்துரை செய்தது. ஆனால் அப்போது போதிய ஆதரவு இல்லாமை, மாநில நிர்வாகத்தின் எதிர்ப்பு போன்றவற்றால் குழு அளித்த அறிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும் நிலச்சரிவுக்கு முக்கிய காரணமே மணல் குவாரிகள் தான்” எனக் கூறினார்.