மணியார் குடும்பம்
கதையின் கரு: அந்த ஊரில் தம்பிராமய்யா பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்தவர். வெள்ளந்தியான சுபாவம் கொண்டவர். தனது சொத்துக்களை எல்லாம் குதிரை பந்தயத்தில் இழந்து விடுகிறார். இவருடைய மகன், உமாபதி ராமய்யா. வேலை எதுவும் செய்யாமல் வெட்டியாக ஊர் சுற்றுகிறார். இவருக்கு தாய்மாமன் ஜெயப்பிரகாஷ். அவருடைய மகள், மிருதுளா முரளி. தம்பிராமய்யா தனது மகன் உமாபதிக்கு மிருதுளா முரளியை பெண் கேட்டு, உற்றார் உறவினர் சகிதம் போகிறார்.
பெண் கொடுக்க மறுப்பதுடன், தம்பிராமய்யாவை அவமானப்படுத்தி பேசி விடுகிறார், ஜெயப்பிரகாஷ். ஆத்திரம் அடைகிற உமாபதி, ‘‘இன்னும் ஆறே மாதங்களில் தொழில் அதிபராகி காட்டுகிறேன். எங்க வீட்டு முன்பு உங்களை மண்டியிட்டு, என் பெண்ணை ஏற்றுக்கொள் என்று சொல்ல வைக்கிறேன்’’ என சபதம் போடுகிறார்.
தனது சபதத்தில் வெற்றி பெற, ஊரில் காற்றாலை தொடங்க முடிவு செய்கிறார். இதற்காக ஊர் மக்களை பங்குதாரர்களாக்கி, ஒரு கோடி ரூபாய் திரட்டுகிறார். அந்த பணத்தை வங்கியில் கட்டுவதற்காக கொண்டு போகும்போது அவரையும், தம்பிராமய்யாவையும் ஏமாற்றி, ஒரு கோடி ரூபாயையும் அபேஸ் செய்து, தலைமறைவாகி விடுகிறார், மொட்டை ராஜேந்திரன்.
அவரிடம் இருந்து உமாபதி பணத்தை மீட்டாரா, தன் சபதத்தில் அவர் வெற்றி பெற்றாரா? என்பது மீதி கதை.
உமாபதிக்கு அவருடைய உயரமும், சுறுசுறுப்பும், கதாநாயகனுக்கே உரிய பலம். நளினமாக நடனம் ஆடுகிறார். துணிச்சலாக சண்டை போடுகிறார். தாய்மாமன் ஜெயப்பிரகாசிடம் சபதம் போடும்போதும், பணத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கும்போதும், உணர்ச்சிகரமாக நடித்து இருக்கிறார்.
இவரை, ஓட ஓட விரட்டி காதலிக்கும் காட்சிகளிலும், சபதத்தில் வெற்றி பெற உதவும் காட்சிகளிலும், மிருதுளா முரளி கவனம் ஈர்க்கிறார். மும்பை சாயலுடன் கூடிய முகம்தான், மைனஸ். வெள்ளந்தியான சுபாவம் கொண்ட பணக்காரராக தம்பிராமய்யா, கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்து இருக்கிறார். நேர்மையும், துணிச்சலும் மிகுந்த ‘என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ ஆக சமுத்திரக்கனி. திருப்திகரமான கதாபாத்திரம். இவர் தொடர்பான காட்சிகளை இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம். ராதாரவிக்கு இரண்டே காட்சிகள் என்றாலும், அவருடைய முத்திரையை பதித்து விட்டு போகிறார்.
மொட்டை ராஜேந்திரனை காமெடி வில்லனாக பார்த்து அலுத்துப்போன நிலையில், இந்த படத்தில், ‘செல்லக்கிளி’ என்ற கதாபாத்திரத்தில் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். கொடூர வில்லனாக அறிமுகமாகி, சிரிப்பு ரவுடியாக மாறுகிற பவன், விவேக் பிரசன்னா, ஸ்ரீரஞ்சனி, மீராகிருஷ்ணன், ஸ்ரீஜாரவி, சிங்கம்புலி, சிங்கமுத்து என படத்தில், நிறைய நட்சத்திரங்கள்.
படத்தின் ஆரம்ப காட்சியே ஒளிப்பதிவாளர் யார்? என்று கேட்க தூண்டுகிறது. பசுமை புரட்சி செய்த கிராமிய அழகு, பி.கே.வர்மா கேமரா மூலம் வசீகரிக்கிறது. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை என நிறைய பொறுப்புகளை ஏற்றிருந்தாலும், தம்பிராமய்யா குழப்பம் இல்லாமல், வெகுசீராக கதை சொல்லியிருக்கிறார். பாடல்கள் அனைத்தும் சுகமான ராகங்கள். படத்தின் முதல் பாதி, விறுவிறுப்பாக கடந்து விடுகிறது. இரண்டாம் பாதியில், தொலைத்த பணத்தை தேடி அலைந்து வில்லன் கும்பலிடம் மாட்டிக்கொண்டு கதறுகிற இடத்தில், தம்பிராமய்யா நெளிய வைக்கிறார். ஒரு கோடி ரூபாயையும் கைப்பற்றியது யார்? என்ற ‘கிளைமாக்ஸ்’ எதிர்பாராத திருப்பம்.