முல்லை பெரியாறு நீர் மட்டத்தை குறைப்பது குறித்து ஆலோசிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வரலாறு காணாத அளவுக்கு பெய்து வருகிறது. இதனால் அந்த மாநிலமே வெள்ளத்தில் மிதக்கிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி விட்டதால், அவற்றில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.
தமிழக-கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையும் தனது முழு கொள்ளளவான 142 அடியை எட்டிவிட்டது. இந்த அணையில் அதிகபட்சமாக 152 அடி உயரத்துக்கு நீரை தேக்கிவைக்க முடியும். சுப்ரீம் கோர்ட்டு அதிகபட்சமாக 142 அடி வரை தண்ணீரை தேக்க அனுமதி வழங்கி இருக்கிறது. அணையின் நீர் மட்டம் நேற்று முன்தினம் 142 அடியை எட்டியதை தொடர்ந்து, அணைக்கு வரும் உபரி நீர் திறந்து விடப்பட்டு இருப்பதால் இடுக்கி மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதனால், முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு கருதி, நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்குமாறு கோரி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்-மந்திரி பிரணாயி விஜயன் கடிதம் எழுதி இருக்கிறார்.
இந்த நிலையில், பாதுகாப்பு கருதி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், முல்லைப் பெரியாறு அணையின் நீரோட்ட பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து அச்சத்துடனேயே இருக்கக்கூடாது என்றும், எனவே அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் கூறினார்கள்.
இது தொடர்பாக முல்லைப் பெரியாறு அணையின் பேரழிவு மேலாண்மை துணைக் குழு மத்திய அரசின் தேசிய நெருக்கடிநிலை மேலாண்மை கமிட்டியுடனும் தமிழக, கேரள மாநிலங்களில் தலைமைச் செயலாளர்களுடனும் இன்று அவசரமாக காணொலி காட்சி மூலம் ஆலோசனை முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை இரு மாநில அரசுகளும் நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்தனர்.
அதன்படி இன்று விசாரணை தொடங்கியது. விசாரணையின் போது,
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைப்பது குறித்து ஆலோசிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. அணையின் துணை கண்காணிப்பு குழு, தேசிய பேரிடர் மேலாண்மை குழு கலந்தாலோசித்து முடிவெடுக்க உத்தரவிட்டு உள்ளது
அணையின் துணை கண்காணிப்பு குழு, தேசிய பேரிடர் மேலாண்மை குழு கலந்தாலோசித்து முடிவெடுக்க உத்தரவிட்டு உள்ளது. அணையின் நீர்மட்டத்தை குறைப்பது தொடர்பாக 2 குழுவும் எடுக்கும் முடிவை தமிழக அரசு மதிக்க வேண்டும் என கூறி உள்ளது.