வாஜ்பாய் மறைவுக்கு பாகிஸ்தான் அரசு, பாக். தலைவர்கள் இரங்கல்
இந்திய அரசியலின் முதுபெரும் தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் நேற்று (ஆக.16) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். வாஜ்பாய் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வாஜ்பாய் மறைவு குறித்து அமெரிக்கா இரங்கல் தெரிவித்தது.
அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் மைக் போம்பியோ வெளியிட்ட இரங்கல் செய்தியில், “ வாஜ்பாயை இழந்து வாடும் இந்தியாவுக்கு, அமெரிக்க மக்கள் உறுதுணையாக இருப்போம். அவரது மறைவு பெரும் துயரத்தை உண்டாக்கியுள்ளது. அவரது மறைவில் வாடும் இந்தியாவுக்காக பிரார்த்திக்கிறோம். அவரது ஆட்சிகாலம் முதல் தற்போது வரை இரு நாடுகளுக்கிடையேயான உறவு சிறப்பாக இருந்து வருகிறது. அவரது நோக்கமே, இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவுக்கு காரணமாக இருந்தது. இந்தியா-அமெரிக்கா இடையேயான கூட்டுறவுக்கு, அவரது ஜனநாயக பங்குகள் மூலம் அடைந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் உலக பாதுகாப்பே உதாரணம்” என்று தெரிவித்து இருந்தார்.
அதேபோல், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானும் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசியல் தலைவர்களும் அரசு சார்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான்கான் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “ இந்தியா – பாகிஸ்தான் இடையேயான நட்புறவை மேம்படுத்த வாஜ்பாய் மேற்கொண்ட நடவடிக்கைகள் எப்போதும் நினைவு கூறப்படும்” என்றார்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “ வாஜ்பாய் இறந்த செய்தி அறிந்து நாங்கள் துயருற்றோம். இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான இரு தரப்பு உறவில் மாற்றம் கொண்டு அளப்பரிய பங்கை வாஜ்பாய் ஆற்றினார். வளர்ச்சிக்காக பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் சார்க் ஒத்துழைப்புக்கு மிகவும் ஆர்வம் காட்டியவர் வாஜ்பாய். வாஜ்பாய் மறைவுக்கு பாகிஸ்தான் அரசும், மக்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீ லீக் -நவாஸ் கட்சியும், வாஜ்பாய் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், லாகூர் – டெல்லி இடையே 1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி காலத்தில் பேருந்து சேவை துவங்கப்பட்டதையும் அக்கட்சி நினைவு கூர்ந்துள்ளது.