வாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் தமிழகத்தில் இன்று அரசு விடுமுறை பள்ளி, கல்லூரிகள் இயங்காது
தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார். மாமனிதரான வாஜ்பாயின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் 16-ந்தேதி (நேற்று) முதல் 22-ந்தேதி வரை 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 7 நாட்களும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது. இந்த நாட்களில் திட்டமிட்டிருந்த அரசு விழாக்களும் ரத்து செய்யப்படுகின்றன.
பள்ளிகளுக்கு விடுமுறை
இதையொட்டி, இன்று மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், மாநில அரசின் அனைத்து நிறுவனங்கள் மற்றும் மாநில பொது நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்படுகிறது.
எனவே தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் இன்று இயங்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தலைமைச்செயலாளரின் இந்த உத்தரவு அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதன்படி செயல்படுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்ளுமாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.