Breaking News
விஸ்வரூபம்-2

கதையின் கரு: கமல்ஹாசன், இந்திய உளவு துறை அதிகாரி. அமெரிக்காவை அழிக்க முயற்சிக்கும் தீவிரவாதிகளை கண்டுபிடித்து ஒழித்துக்கட்ட புறப்படுகிறார். அவருடன் காதல் மனைவி பூஜா குமார், உடன் பயிற்சி பெற்ற ஆண்ட்ரியா ஆகிய இருவரும் செல்கிறார்கள். தீவிரவாதிகளின் தலைவன் உமர் அமெரிக்காவில் இருந்து தப்பி ஓடுகிறான். அவனை தேடி வேட்டைக்கு புறப்படுகிறார், கமல்ஹாசன்.

அடுத்து அவருக்கு லண்டனில் ஒரு பெரிய வேலை காத்திருக்கிறது. கடலுக்கு அடியில் செயற்கை சுனாமியை ஏற்படுத்தி லண்டன் நகரை தகர்க்க முயற்சிக்கிறார்கள், தீவிரவாதிகள். அவர்களின் சதியை முறியடிக்க, கப்பலோடு கடலுக்குள் மூழ்கி கிடக்கும் வெடிகுண்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும். அகற்றாவிட்டால், லண்டன் நகரமே அழிந்து போகும். பேரழிவில் இருந்து இங்கிலாந்தையும், அந்த நாட்டின் மக்களையும் காப்பாற்றும் வேலையை கமல்ஹாசன் ஏற்கிறார். இந்த ஆபத்தான வேலையில் அவருக்கு காதல் மனைவி பூஜாகுமார் உதவுகிறார். கடல் நீச்சலில் பயிற்சி பெற்ற அவர் கடலுக்குள் மூழ்கி, குண்டு வைக்கப்பட்டிருக்கும் பெட்டியை கண்டுபிடிக்கிறார்.

ஆத்திரம் அடைகிற தீவிரவாதிகள் கமல்ஹாசன்-பூஜாகுமார் இருவரையும் கொல்ல முயற்சிக்கிறார்கள். அவர்களின் கொலை முயற்சியில் இருந்து கமல்ஹாசனும், பூஜாகுமாரும் தப்புகிறார்கள். அடுத்து தீவிரவாதிகளின் தலைவன் உமர் டெல்லியை அழிக்க முயற்சிக்கிறான். அவனிடம் இருந்து நகரை காப்பாற்ற முயற்சிக்கிறார், கமல்ஹாசன். அவருடைய முயற்சிகளை தடுத்து நிறுத்த பூஜாகுமாரை கடத்துகிறார்கள். ஆண்ட்ரியாவை கொன்று, அவருடைய உடலை பார்சல் செய்து கமல்ஹாசனுக்கு அனுப்புகிறார்கள்.

தீவிரவாதிகளை தேடி செல்லும் கமல்ஹாசனை கட்டிப்போடுகிறார்கள். அவர்களிடம் இருந்து கமல்ஹாசன் தப்பினாரா? பூஜா குமாரை காப்பாற்றினாரா? என்பது, ‘கிளைமாக்ஸ்.’

காதல் மற்றும் சண்டை காட்சிகளில், இருபது வயது இளமையை காட்டும் இந்திய சினிமாவின் அதிசயம், கமல்ஹாசன். அவர் பூஜாகுமார், ஆண்ட்ரியா ஆகிய இருவருக்கும் நடுவில் அமர்ந்து விமான பயணம் செய்வது போல் எதிர்பார்ப்புடன் தொடங்குகிறது, படம். சண்டை காட்சிகளில் இரும்பு மனிதர் போல் மாறுகிற அவர், பூஜா குமாருடனான காதல் – படுக்கை அறை காட்சிகளில் மென்மையாக வளைந்து கொடுக்கிறார். சண்டை காட்சிகளில் இதுவரை எந்த படத்திலும் பார்த்திராத பிரமிப்பு. “பெயின் இருந்தால்தான் கெயின்” என்று பூஜா குமாருடன் கமல்ஹாசன் உதட்டுடன் உதடு உரச தயாராகும் காட்சியில், தியேட்டரில் விசில் பறக்கிறது.

பூஜா குமார், அழகான நாயகி. சிரிப்பிலும், புன்னகையிலும் வசீகரிக்கிறார். நடிப்பிலும் ‘ஸ்கோர்’ செய்கிறார். இவரைப் பார்த்து அவ்வப்போது பொறாமைப்படும் ஆண்ட்ரியா, ரசிக்க வைக்கிறார். இந்திய உளவு துறையின் உயர் அதிகாரியாக சேகர் கபூர், தீவிரவாதிகளின் தலைவன் உமராக ராகுல் போஸ், கமல்ஹாசனை அழிக்க முயற்சிக்கும் இந்திய உளவு துறையின் இன்னொரு அதிகாரியாக ஆனந்த் மகாதேவன் ஆகியோர் கதாபாத்திரங்களாகவே மாறியிருக்கிறார்கள்.

கேமரா, ஹாலிவுட் பிரமிப்பை ஏற்படுத்தி, படத்துடன் ஒன்ற வைக்கிறது. ஜிப்ரான் இசையில், “நானாகிய நதி மூலமே…” பாடல், முணுமுணுக்க வைக்கும் ‘மெலடி.’ படத்தின் முதல் பாதி, ரொம்ப நீளம். தொய்வே இல்லாத விறுவிறுப்பான திரைக்கதையும், தீவிரவாதிகளின் தலைவன் உமரின் மகன்களை கமல்ஹாசன் படிக்க வைக்கும் கிளைமாக்சும், டைரக்டர் கமல்ஹாசனின் முத்திரை.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.