வேளச்சேரியில் தாசில்தார் அலுவலகம் திறப்பு 5 புதிய தாலுகாக்களையும் முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்
நாமக்கல் மாவட்டம் நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர் ஆகிய 3 வட்டங்களை சீரமைத்து புதிதாக உருவாக்கப்பட்ட மோகனூர் வருவாய் வட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்துவைத்தார்.
மேலும், மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்தை சீரமைத்து கள்ளிக்குடி வருவாய் வட்டம், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை, பரமக்குடி வட்டங்களை சீரமைத்து ஆர்.எஸ்.மங்கலம் (ராஜ சிங்கமங்கலம்) வருவாய் வட்டம், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் வட்டங்களை சீரமைத்து ஏரல் வருவாய் வட்டம், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், நாங்குநேரி வட்டங்களை சீரமைத்து திசையன்விளை வருவாய் வட்டம் ஆகிய புதிய வருவாய் வட்டங்களையும் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
வேளச்சேரி தாசில்தார்
சென்னை வேளச்சேரியில் புதிய தாசில்தார் அலுவலக கட்டிடத்தை எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார். மேலும் பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்வதற்கு தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலமாக 1 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள காணொலி கருத்தரங்கு மையங்களையும் அவர் திறந்துவைத்தார்.
ஆசிய பேரிடர் ஆயத்த மையம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பேரிடர் தணிப்பு துறை சார்பாக வருவாய் நிர்வாக ஆணையர் கொ.சத்யகோபால், ஆசிய பேரிடர் ஆயத்த மையத்தின் சார்பாக இயக்குநர் டாக்டர் ஹான்ஸ் குட்மன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.
இந்த தகவல்கள் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.