இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: சரிவில் இருந்து மீளுமா இந்திய அணி? 3–வது டெஸ்ட் இன்று தொடக்கம்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சரிவில் இருந்து மீள வேண்டிய நெருக்கடியில் தவிக்கும் இந்திய அணி இன்று 3–வது டெஸ்டில் களம் இறங்குகிறது.
3–வது டெஸ்ட் இன்று தொடக்கம்
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் 31 ரன்கள் வித்தியாசத்திலும், லண்டன் லார்ட்சில் நடந்த 2–வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வி கண்டு தொடரில் 0–2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.
இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து மோதும் 3–வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்களும் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.
முதலாவது டெஸ்டில் நெருங்கி வந்து வெற்றி வாய்ப்பை கோட்டை விட்ட இந்திய அணியினர், 2–வது டெஸ்டில் இரு இன்னிங்சிலும் முறையே 107 ரன், 130 ரன்கள் மட்டுமே எடுத்து எந்தவித எதிர்ப்பும் இன்றி சரணாகதியானார்கள். இதில் மழை பாதிப்பை தவிர்த்து பார்த்தால் இந்திய வீரர்கள் 2 நாள் கூட தாக்குப்பிடிக்கவில்லை. முன்னணி பேட்ஸ்மேன்கள் சொல்லி வைத்தார் போல் ஒட்டுமொத்தமாக சொதப்பினர். இதனால் ‘நம்பர் ஒன்’ அணியான இந்தியா மீது கடுமையான விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
பதிலடி கொடுக்குமா?
தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எழுச்சி பெற வேண்டிய நிர்ப்பந்தத்தில் இந்திய வீரர்கள் உள்ளனர். முந்தைய டெஸ்டில் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த சீதோஷ்ண நிலையை கவனத்தில் கொள்ளாமல் இந்திய அணி நிர்வாகம் அவசரப்பட்டு 2 சுழற்பந்து வீச்சாளர்களை சேர்த்து தவறிழைத்தது. இதனால் இந்த டெஸ்டில் சில மாற்றங்கள் இருக்கும். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்படுவார். இதுவரை 0, 20, 1, 0 வீதம் மட்டுமே ரன் எடுத்துள்ள விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கின் இடமும் கேள்விக்குறியாகி இருக்கிறது. அவருக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் 20 வயதான ரிஷாப் பான்ட் அறிமுக வீரராக இடம் பெற வாய்ப்புள்ளது.
விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்து விட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் வருகை இந்திய பந்து வீச்சுக்கு புது நம்பிக்கையை அளிக்கிறது. முதுகுவலியால் அவதிப்பட்ட கேப்டன் விராட் கோலியும் அதில் இருந்து மீண்டு விட்டார்.
சமாளிப்பது எப்படி?
இங்கிலாந்து ஆடுகளங்களில் எப்போதும் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சு சகட்டுமேனிக்கு ‘ஸ்விங்’ ஆகும். களத்தில் பந்து எந்த மாதிரி திரும்பி செல்கிறது என்பதை கணிப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும். பந்து பேட்டில் சரியாக ‘கிளிக்’ ஆகாவிட்டால் நேராக ‘ஸ்லிப்’ பீல்டர்களிடம் கேட்ச்சாக தஞ்சமடையும்.
இதில் இந்திய வீரர்கள் பொறுமையாகவும், கூடுதல் கவனமுடனும் செயல்பட வேண்டும். ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் மீண்டும் மிரட்டுவதற்கு ஆயத்தமாக உள்ளனர். அவர்களது பந்து வீச்சை பயமின்றி நம்பிக்கையோடு எதிர்கொண்டால், எதிரணியின் சவால்களை முறியடிக்கலாம். இதே போல் தொடக்க ஆட்டக்காரர்கள் முரளிவிஜய், லோகேஷ் ராகுல் சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது அவசியமாகும். அவர்கள் நன்றாக ஆடினால் மிடில் வரிசை வீரர்களுக்கு சுமை குறைந்து, நெருக்கடியின்றி பேட்டிங் செய்ய முடியும்.
பென் ஸ்டோக்சுக்கு இடம்
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை முதல் இரு டெஸ்டுகளில் கிடைத்த வெற்றியால் உற்சாகமுடன் காணப்படுகிறார்கள். அதே உத்வேகத்துடன் 3–வது டெஸ்டிலும் இந்திய அணியை போட்டுத்தாக்கி தொடரை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டுகிறார்கள். அடி–தடி வழக்கில் இருந்து விடுபட்டு அணியுடன் இணைந்துள்ள, ஆல்–ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவார் என்று கேப்டன் ஜோ ரூட் நேற்று உறுதிப்படுத்தினார். முதலாவது டெஸ்டில் ஆட்டநாயகன் விருது பெற்ற 20 வயதான சாம்குர்ரனை கழற்றி விட முடிவு செய்யப்பட்டுள்ளது. குர்ரனை நீக்க எடுத்த முடிவு, கேப்டனாக எனது வாழ்க்கையில் எடுத்த கடினமான முடிவுகளில் ஒன்று ஜோ ரூட் குறிப்பிட்டார்.
உள்ளூர் சூழலில் இங்கிலாந்து வலுமிக்கது என்பது முந்தைய டெஸ்டுகளில் கண்கூடாக தெரிந்து விட்டது. அதனால் இந்திய அணி அவர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்குமா அல்லது மறுபடியும் அடங்கிப்போகுமா? என்பது போட்டி தொடங்கிய சில மணி நேரங்களில் தெரிந்து விடும். இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை 6 டெஸ்டுகளில் விளையாடி அதில் 1–ல் வெற்றியும், 2–ல் தோல்வியும், 3–ல் டிராவும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றில் இடம் பிடிக்குமா இந்தியா?
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு அணி முதல் இரு டெஸ்டில் தோற்று அதன் பிறகு தொடரை கைப்பற்றிய நிகழ்வு ஒரே ஒரு முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. 1936–37–ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பிராட்மேன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் இரு டெஸ்டில் தோற்று எஞ்சிய 3 டெஸ்டுகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அந்த வரலாற்று பட்டியலில் இந்திய அணியும் இடம்பெறுமா? என்று ரசிகர்கள் ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–
இங்கிலாந்து: அலஸ்டயர் குக், கீடான் ஜென்னிங்ஸ், ஆலிவர் போப், ஜோ ரூட் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித்.
இந்தியா: முரளிவிஜய் அல்லது ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷாப் பான்ட், ஹர்திக் பாண்ட்யா அல்லது கருண் நாயர், அஸ்வின், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.
பிற்பகல் 3.30 மணிக்கு…
இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.