கேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி
கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால், மாநிலத்தின் 39 அணைகளும் நிரம்பி உள்ளன.
இதில் 35 அணைகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. இது தாழ்வான பகுதிகளை சூழ்ந்து வெள்ளக்காடாக்கி இருக்கிறது. இதனால் மொத்த மாநிலமும் பெருங்கடலுக்குள் சிக்கியிருப்பது போன்ற சூழல் ஏற்பட்டு உள்ளது. இதைப்போல இடுக்கி, வயநாடு, மலப்புரம் போன்ற மலைப்பாங்கான மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவால், எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாகவே காணப்படுகிறது.
மழை, நிலச்சரிவு ஆகியவற்றில் சிக்கி தற்போது வரை 324 பேர் பலியாகியுள்ளனர். கேரள வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த இயற்கை பேரிடரில் சிக்கி தத்தளித்து வரும் மக்களை மீட்பதற்காக முப்படையை சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் போர்க்கால அடிப்படையில் களத்தில் இறங்கி உள்ளனர்.
வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக பிரதமர் மோடி நேற்று, திருவனந்தபுரம் சென்றார். இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து தனிவிமானம் மூலம் கொச்சி சென்றார். ஆனால், அங்கு கனமழை தொடர்ந்ததால், பிரதமர் மோடி தனது ஆய்வை உடனடியாக மேற்கொள்ளவில்லை. ஆய்வுக்கு முன்பாக, கொச்சியில் ஆளுநர் சதாசிவம், முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதன்பிறகு, ஹெலிகாப்டர் மூலமாக பிரதமர் மோடி வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தார். பிரதமர் மோடியுடன் கேரள ஆளுநர் சதாசிவம், முதல் மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் உடன் சென்றனர்