கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தென்மேற்கு பருவமழையால் வெள்ளக்காடாகியுள்ளது. கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது.
அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது. இது தாழ்வான பகுதிகளை சூழ்ந்து வெள்ளக்காடாக்கி இருக்கிறது. இதனால் மொத்த மாநிலமும் பெருங்கடலுக்குள் சிக்கியிருப்பது போன்ற சூழல் ஏற்பட்டு உள்ளது. இதைப்போல இடுக்கி, வயநாடு, மலப்புரம் போன்ற மலைப்பாங்கான மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவால், எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாகவே காணப்படுகிறது. மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பலியனோர் எண்ணிக்கை 324 ஆக அதிகரித்துள்ளது.
கேரள வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த இயற்கை பேரிடரில் சிக்கி தத்தளித்து வரும் மக்களை மீட்பதற்காக முப்படையை சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் போர்க்கால அடிப்படையில் களத்தில் இறங்கி உள்ளனர்.வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி, ஆளுநர் சதாசிவம், முதல் மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியதோடு, ஹெலிகாப்டர் மூலமாக வெள்ளப்பகுதிகளை ஆய்வு செய்தார். கேரளாவுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ 500 கோடி வழங்கப்படும் என அறிவித்தார்.
இதற்கிடையே, கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:- “ கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும். லட்சக்கணக்கான வாழ்வு மற்றும் வாழ்வாதாரம், எதிர்காலம் ஆபத்தில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.