கேரளாவுக்காக நிவாரணப் பொருட்கள் சேகரித்த உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் சோசப்
டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில், நேற்று கேரளாவுக்காக நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அப்போது நீதிபதி குரியன் சோசப் தன்னார்வலர்களுடன் சேர்ந்து உதவி செய்தது அனைவர் மத்தியிலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கேரளாவிலுள்ள 13 மாவட்டங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ள நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து நிவாரணப் பொருட்கள் குவிந்தவண்ணம் உள்ளன. இதில் தமிழக மக்களிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் பெறப்பட்டு, கேரள மாநிலத்திற்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் ஒருங்கிணைத்து அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதேபோல, டெல்லியில் உள்ள மக்களும் நேற்று கேரளாவுக்காக நிவாரண பொருட்களை சேகரித்தனர். உச்சநீதிமன்ற வளாகத்திலும் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அப்போது அங்கு முதல் ஆளாக வந்த உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அவர் தன்னுடன் ஏகப்பட்ட நிவாரண பொருட்களை எடுத்து வந்திருந்தார். மேலும் அங்கு வரும் நிவாரணப் பொருட்களை மிகுந்த ஆர்வத்தோடு வாங்குவது அதனை தானே முழுமையாக பேக் செய்வது என அனைத்து வேலைகளையும் அவர் செய்தார். அவ்வாறு சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் அனைத்தும் இன்று ராணுவ விமானம் மூலம் கேரளாவுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன. தன்னார்வலர்களுக்கு நீதிபதி குரியன் ஜோசப் உதவி செய்தது அனைவர் மத்தியிலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.