கேரளா வெள்ள பாதிப்பு: நடிகை அமலாபால் நிவாரண உதவி – பொதுமக்கள் பாராட்டு
நடிகை அமலாபால், ‘அதோ அந்த பறவை போல’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் சண்டை காட்சியில் அவர் நடித்தபோது, அவருடைய வலது கையில் பலத்த அடிபட்டு காயம் அடைந்தார். இதற்காக அவர் கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவர் கையில் கட்டு போடப்பட்டது.
கையில் கட்டுப்போட்ட நிலையில், அவர் கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பொருட்களை அவரே கடைகளுக்கு சென்று வாங்கினார். வெள்ள சேதம் பாதித்த இடங்களுக்கு சென்று நிவாரண பொருட்களை வழங்கினார். கையில் கட்டுப்போட்ட நிலையில் அவர் நிவாரண உதவிகளை செய்ததை பார்த்து, பொதுமக்கள் பாராட்டினார்கள்.
அவர் கையில் கட்டுடன் நிவாரண பொருட்களை வாங்குவது, பின்னர் அவற்றை பொதுமக்களுக்கு அவர் வழங்குவது ஆகிய புகைப்படங்கள், இணையதளங்களில் பரவி வருகிறது. அமலாபாலின் மனிதாபிமானத்தை அவருடைய ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
நடிகர் நிவின்பாலி ஒரு உருக்கமான அறிக்கை மூலம் கேரள மக்களுக்கு உதவி கோரி வருகிறார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“கடவுளின் தேசம் என்ற கேரளாவில் பிறந்ததற்காக நான் பெருமை கொண்டிருந்தேன். ஆனால், இன்று அந்த அழகிய கேரளா வெள்ளத்தாலும், நிலச்சரிவினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உணவின்றி, அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்த அளவுக்கு அத்தியாவசிய பொருட்களை உடனடியாக அனுப்புங்கள்.
யார் மூலமாக என்பது முக்கியமல்ல. உடனடியாக உதவிகள் வந்து சேரவேண்டும் என்பதுதான் முக்கியம். கடவுளின் தேசத்தை மனிதநேயம் மீட்டு கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” இவ்வாறு அந்த அறிக்கையில் நிவின்பாலி கூறியிருக்கிறார்.