தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரூ.1 கோடி மருந்துகள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில், கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான உயிர் காக்கும் மருந்து பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் ஏற்படக் கூடிய தொற்று நோய்களை தடுப்பதற்கும், மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கும் 25 லட்சம் ‘டாக்சி சைக்கிளின்’ மாத்திரைகள் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு மருந்துகள் (‘ஆன்டிபயாடிக்ஸ்’), 5 லட்சம் ‘குளோர்பெனரமின்’ மாத்திரைகள், 1 லட்சம் களிம்புகள் பிற அத்தியாவசிய மருந்துகள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ரூ.1 கோடி மதிப்பிலான…
மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக 6 லட்சம் எண்ணிக்கையிலான கை உறைகள், பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்காக குளோரின் மாத்திரைகள் மற்றும் ‘பிளச்சிங்’ பவுடர் என மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான மருந்து பொருட்கள் கோவை மாவட்டத்தில் இருந்து பாலக்காட்டுக்கும், நெல்லை மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள சுகாதார பணிகளுக்கான துணை இயக்குநர்கள் கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.