வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் அவதி: கேரளாவிற்கு ஆந்திர ஐஏஎஸ் சங்கம் நிதியுதவி
கடவுளின் சொந்த நாடு என்று கருதப்பட்டு வந்த கேரள மாநிலம், தற்போது வரலாறு காணாத மழை வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது. ஏறத்தாழ 100 ஆண்டுகளில் பெய்யாத மழை இப்போது பெய்து சுமார் ரூ.19 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சுமார் 357 பேர் மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்து உள்ளனர். 2¼ லட்சத்துக்கும் மேலான மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.
பலத்த மழை காரணமாக கேரளா தொடர்ந்து தவித்து வருகிற நிலையில், முதல்- மந்திரி நிவாரண நிதிக்கு அனைத்து தரப்பினரும் உதவுமாறு அந்த மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் ஒரு பதிவும் வெளியிட்டார்.
இதையடுத்து நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களும் போட்டி போட்டுக் கொண்டு கேரளாவுக்கு நிதி உதவி அளித்து வருகின்றன.
இந்தநிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தங்களின் ஒரு நாள் சம்பளத்தை நிதியாக அளிக்க உள்ளதாக ஆந்திரா ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் நிவாரண நிதியாக தங்களின் ஒரு நாள் சம்பளத்தை தர உள்ளதாக தெரிவித்துள்ளது.