கேரளாவில் கடற்படை விமான தளத்தில் விமான சேவை இன்று தொடங்கியது
கேரளாவில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பெய்து வந்த கனமழையும், 80க்கும் மேற்பட்ட அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரும், ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவும் மாநிலத்தின் 14 மாவட்டங்களையும் நிலைகுலைய செய்திருக்கிறது.
கடந்த 8ந்தேதி முதல் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 197 பேர் பலியாகி இருக்கின்றனர். இதில் அதிகபட்சமாக இடுக்கி மாவட்டத்தில் 43 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அத்துடன் பல மாவட்டங்களில் ஏராளமானோர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், நாட்டின் பரபரப்பு நிறைந்த விமான நிலையங்களில் 7வது இடத்தில் இருக்கும், கேரளாவின் கொச்சி விமான நிலையம் வெள்ள நீரால் சூழப்பட்டு உள்ளது. இதனால் அங்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டது. விமான நிலையம் 26ந்தேதி வரை மூடப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து அங்குள்ள கடற்படை தளத்தில் இருந்து இன்று முதல் விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி பெங்களூரு, மதுரை, கோவை போன்ற இடங்களுக்கு இந்த கடற்படை தளத்தில் இருந்து விமானங்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், மத்திய தொழிற்பாதுகாப்பு படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக்குழுவினர் இந்த கடற்படை தளத்தில் ஆய்வு மேற்கொண்டு சென்றனர்.
இந்நிலையில், கேரளாவின் கொச்சி நகரில் அமைந்துள்ள இந்திய விமான படையின் கருடா கடற்படை விமான தளத்தில் இருந்து இன்று முதல் விமான சேவை இயக்கப்படுகிறது. அதன்படி இன்று வர்த்தக ரீதியிலான முதல் விமானம் கொச்சி கடற்படை விமான தளத்தில் வந்து இறங்கியது.