கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீக்கம்
தமிழக கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதால் கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.
செல்போன் பயன்படுத்த பள்ளிகளில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு அமலில் உள்ளது. கல்லூரிகளை பொறுத்தவரையில் மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல ‘ராக்கிங்’ உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
வகுப்பு நேரத்தில் பாடத்தில் இருக்கும் கவனம் சிதறிவிடக்கூடாது என்பதாலும், செல்போன் பயன்பாடு கல்வித்திறனை கெடுத்துவிடக்கூடாது என்பதாலும் கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான கல்லூரிகளில் இந்த உத்தரவு தீவிரமாக பின்பற்றப்படுகிறது.
அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு மாணவர்களிடம் இருந்து செல்போன்கள் கைப்பற்றப்படுகிறது. சில கல்லூரிகளில் செல்போனை கல்லூரிக்கு கொண்டு வரலாம், ஆனால் பாட நேரத்தில் ‘சுவிட்ச்-ஆப்’ செய்து விட வேண்டும் என்று மாணவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
இந்தநிலையில் கல்லூரிகளில் செல்போன் பயன்பாட்டுக்கான தடையை நீக்க தமிழக அரசின் உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மேலும் உரிய ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் திட்டமிட்டு உள்ளது.
கல்லூரிக்கு வரும் அனைத்து மாணவர்களும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு இருந்தாலும், அதனை முழுமையான அளவில் நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. மேலும் இந்த விதிகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் மாணவர்களை கொண்டு வருவதிலும் முரண்பாடுகள் இருப்பதாக தெரிகிறது.
எனவே செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இதில் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை அரசு அறிவிக்க இருக்கிறது.
இதற்கிடையே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ.25 ஆயிரம் மாத ஊதியத்தில் பணியாற்றும் 3 ஆயிரம் கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரந்தரப்படுத்த உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்கட்டமாக 1,400 கவுரவ விரிவுரையாளர்கள் நிரந்தரம் செய்யப்பட இருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
அதேபோல அரசு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சுருக்கெழுத்தாளர் உள்ளிட்ட தற்காலிக அலுவலக பணியாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.