செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. காவிரி ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் ஆற்று நீரை பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வாங்கல் பாலத்தில் இருந்தபடி ஒரு பெற்றோர் காவிரியாற்றில் செல்பி எடுத்தனர். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த 4 வயது குழந்தை ஆற்றில் தவறி விழுந்தது.
பாலத்தின் நடுப்பகுதியில் நின்று அவர்கள் செல்பி எடுத்ததால் குழந்தை ஆற்றின் நடுப்பதியில் விழுந்து அடித்து செல்லப்பட்டது. குழந்தையை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனைக்கண்ட அங்கிருந்தவர்கள் அலறி துடித்தனர். பெற்றோரின் செல்பி ஆசையால் 4 வயது குழந்தை அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருப்பதால் மாவட்ட ஆட்சியர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆற்றின் ஓரம் நின்று செல்பி எடுப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.