திருவண்ணாமலையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு புகார் எதிரொலி – அரசு வேளாண் கல்லூரியில் நீதிபதி விசாரணை மாணவியை மிரட்டும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு
திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரி மாணவிக்கு உதவி பேராசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக மாவட்ட நீதிபதி நேரில் விசாரணை நடத்தினார். புகார் கூறிய மாணவியை, பெண் உதவி பேராசிரியைகள் இருவர் மிரட்டும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலையை அடுத்த வாழவச்சனூர் கிராமத்தில் அரசு வேளாண் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு, இரண்டாமாண்டு படிக்கும் மாணவி ஒருவர், கல்லூரி உதவி பேராசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.
அந்த மாணவிக்கு கடந்த 7 மாதங்களுக்கு மேலாக உதவி பேராசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவரது பெற்றோர் நேற்று முன்தினம் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம் புகார் கூறினர். அப்போது, பாலியல் தொந்தரவு கொடுத்த உதவி பேராசிரியருக்கு ஆதரவாக மிரட்டல் விடுக்கும் விடுதி வார்டன்கள் இருவரின் உரையாடலையும் வெளியிட்டனர். மேலும், பாலியல் தொந்தர வுக்கு ஆளான கல்லூரி மாணவி நேற்று மாவட்ட நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக புகாரளித்தார். அவரிடம், மாவட்ட நீதிபதி மகிழேந்தி தனியாகவும் விசாரணையும் நடத்தினார்.
மாணவி மீது வீண்பழி கூடாது
இதுகுறித்து மாவட்ட நீதிபதி மகிழேந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த சம்பவம் கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் பல்கலைக்கழகத்தின் தரம் எந்தளவுக்கு தாழ்ந்துள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். பாதிக்கப்பட்ட மாணவி வேளாண் கல்லூரியில் சேர்ந்து படிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாலி யல் தொந்தரவு கொடுத்த உதவி பேராசிரியர் மற்றும் அவருக்கு உதவிய பெண் உதவி பேராசிரியர்கள் இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்கள் நீதிமன்றம் சார்பில் கல்லூரியில் உரிய விசாரணை நடத்தப்படும். பாதிக்கப்பட்ட மாணவியின் மீது வீண்பழி சுமத்துவது கல்லூரி நிர்வாகம் மீது சேற்றை பூசிக்கொள்வதற்கு சமம்” என்று கூறினார்.
இந்நிலையில், பாலியல் குற்றச் சாட்டு கூறிய மாணவிக்கு எதிராக அங்கு படிக்கும் மாணவிகள் கல்லூரி வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கல்லூரி முதல்வர் புகார்
இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கல்லூரியின் மீது புகார் கூறியுள்ள மாணவி, கல்லூரியில் படிக்கும் சக மாணவிகளின் செல்போனை உடைப்பதும் அவர்களை இழிவாக பேசுவதுடன் தொடர்ந்து பிரச்சினை யில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரை கல்லூரி விடுதியில் இருந்து நீக்கி யதற்கான உத்தரவு கடிதத்தை கடிதம் மூலம் அனுப்பினோம். ஆனால், அந்த கடிதத்தை அவர்கள் வாங்கவில்லை. பாலியல் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்த உள்ளது. தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். புகார் கூறிய மாணவி தன் மீதுள்ள தவறை மறைக்கவே கல்லூரி மீதும் பேராசிரியர்கள் மீது பழி சுமத்தி யுள்ளார்” என்று தெரிவித்தார்.
7 நிமிட மிரட்டல் ஆடியோ
கல்லூரி மாணவி தரப்பில் செல்போன் ஆடியோ பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் உதவி பேராசிரியருக்கு ஆதரவாக பெண் உதவி பேராசிரியைகள் இருவர் மாணவியை தனியாக அழைத்து மிரட்டுகின்றனர். சுமார் 7 நிமிடங்கள் நடக்கும் இந்த உரையாடல் பதிவில், “மரியாதையாக உனது அம்மா, அப்பாவை அழைத்து வந்து மன்னிப்பு கேட் டால் படிப்பை தொடரலாம். இல்லாவிட்டால் பல்கலைக்கழகத்தின் எந்த கல்லூரியிலும் படிக்க முடி யாது. பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளரிடம் பேசிவிட்டோம். உனக்கு எதிரான எல்லா ஆதாரங்களையும் தயார் செய்து விட்டோம். இதெல்லாம் சின்ன விஷயம். டிஜிபியே வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. புகார் கொடுத்து உன் வாழ்க்கையை தொலைத்து விடாதே. அதை விட்டுவிட்டு எங்களுக்கு எதிராக செயல்பட்டால் நாங்களும் எல்லா திட்டத்தையும் செய்து விட்டு வந்துவிட்டோம்” என்ற உரையாடல் பதிவாகியுள்ளது.
மாவட்ட நீதிபதி அதிர்ச்சி
கல்லூரி மாணவியின் புகாரைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதி மகிழேந்தி, வேளாண் கல்லூரியில் நேரில் விசாரணை நடத்தினார். கல்லூரி முதல்வர், உதவி பேராசிரியர்கள், மாணவிகள், அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது, பாலியல் புகார் கூறிய மாணவி மீது திருட்டு புகாரை கல்லூரி நிர்வாகத் தரப்பில் தெரிவித்தனர்.
இதையடுத்து, விடுதியில் மாணவி தங்கியிருந்த அறையை ஆய்வு செய்த நீதிபதி, அந்த அறைக் கதவில் தாழ்ப்பாள் இல்லாமல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். விசாரணையின்போது மாணவி தொடர்பான ஆவணங்களை அளிக்க கல்லூரி நிர்வாகத்தினர் மறுத்துவிட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த நீதிபதி மகிழேந்தி, இன்னும் விசாரணை நிறைய இருக்கிறது எனக்கூறி அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த விசாரணையின்போது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுமதி சாய்பிரியாவும் உடனிருந்தார்.