ஜெ. அத்தையின் வாழ்க்கையை படமாக்க விட மாட்டோம்: தீபக் அடம்
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க அவரின் அண்ணன் மகன் தீபக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போவதாக இயக்குனர் ஏ.எல். விஜய் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து தானும் ஜெயலலிதாவின் வாழ்க்கை பற்றிய படத்தை எடுக்கப் போவதாக இயக்குனர் ப்ரியதர்ஷினியும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் விஜய்யும், ப்ரியதர்ஷினியும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று படப்பிடிப்பை துவங்கப் போவதாக தெரிவித்துள்ளனர். இப்படி மூன்று பேர் ஒரே நேரத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க உள்ளனர்.
என் வாழ்க்கை படமாக்கப்பட்டால் ஐஸ்வர்யா ராய் என் கதாபாத்திரத்தில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று ஜெயலலிதா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதை மனதில் வைத்து பாரதிராஜா ஐஸ்வர்யா ராய் மற்றும் அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். ஐஸ்வர்யா ராய் ஒப்புக் கொண்டால் ஜெயலலிதாவின் ஆசை நிறைவேறிவிடும்.
ஏ.எல். விஜய் மற்றும் ப்ரியதர்ஷினி ஆகியோரின் படங்களில் ஜெயலலிதாவாக நடிக்க வைக்க த்ரிஷா, நயன்தாரா, வித்யா பாலன், மஞ்சிமா மோகன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. மூன்று இயக்குனர்கள் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை கையில் எடுத்துள்ள நிலையில் அவரின் குடும்பத்தாரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அத்தையின் வாழ்க்கையை படமாக எடுப்பது குறித்து என்னிடமும், என் சகோதரி தீபாவிடமும் அனுமதி பெற வேண்டும். மேலும் சசிகலாவிடமும் அனுமதி பெற வேண்டும். இதுவரை யாரும் எங்களிடம் அனுமதி பெறவில்லை. அத்தையின் வாழ்க்கையை படமாக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மீறி படம் எடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றார் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்.