பேட்மிண்டனில் சிந்து, சாய்னா வெற்றி
இந்திய வீராங்கனை சிந்து பந்தை திருப்பி அடிக்கிறார்.
ஆசிய விளையாட்டில் வில்வித்தை ரிகர்வ் தனிநபர் பிரிவில் அனைத்து இந்தியர்களும் சோடை போனார்கள். பெண்கள் பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை தீபிகா குமாரி 3-7 என்ற கணக்கில் சீனதைபேயின் சின் யிங் லீயிடம் தோல்வி அடைந்தார்.
ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் அதானு தாஸ் கால்இறுதியில் 3-7 என்ற கணக்கில் இந்தோனேஷியாவின் ரியா இகாவிடம் வீழ்ந்தார். விஸ்வாஸ், புரோமிளா ஆகியோரும் வெளியேற, ரிகர்வ் தனிநபர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
ஸ்குவாஷ் போட்டியில் ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சவுரவ் கோஷல் நேர் செட் கணக்கில் இலங்கையின் முக்தார் வகீலையும், ஹரிந்தர் பால் சந்து நேர் செட்டில் தென்கொரியாவின் யங்ஜோவையும் விரட்டியடித்தனர். இதே போல் பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் தீபிகா குமாரி இந்தோனேஷியாவின் ரோமாவையும், ஜோஷ்னா சின்னப்பா பிலிப்பைன்சின் ஜெமிகாவையும் தோற்கடித்தனர்.
கைப்பந்து போட்டியில் இந்திய பெண்கள் அணி 8-25, 19-25, 23-25 என்ற நேர் செட் கணக்கில் கஜகஸ்தானிடம் பணிந்தது. இந்திய அணி தொடர்ந்து சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.
ஜிம்னாஸ்டிக்சில் வால்ட் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அருணா ரெட்டி, பிரனதி நாயக் முறையே 7, 8-வது இடங்களையே பிடித்து சோகமுடன் திரும்பினர்.
பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-10, 12-21, 23-21 என்ற செட் கணக்கில் தி டிராங்கை (வியட்னாம்) போராடி வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் 21-7, 21-9 என்ற நேர் செட் கணக்கில் சோராயாவை (ஈரான்) பந்தாடினார்.