18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு; 31-ந் தேதி இறுதி வாதம்
தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கு 3-வது நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் நேற்று 11-வது நாளாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆட்சியை கவிழ்க்க திட்டம் தீட்டியதாக 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக ஜக்கையன் அளித்ததாகச் சொல்லப்படும் புகார் தொடர்பான ஆவணங்கள் சபாநாயகர் தரப்பில் அளிக்கப்படவில்லை. ஆட்சிக்கு எதிராக 18 எம்.எல்.ஏ.க்கள் செயல்படவில்லை.
18 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் அளித்த கடிதத்தில் எந்த இடத்திலும் அரசுக்கு எதிராக அல்லது ஆட்சிக்கு எதிராக எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.
முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. உள்கட்சி விவகாரம் என்பதால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர, தகுதி நீக்கம் செய்ய முடியாது. தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சிக்கு எதிராக செயல்பட்டார்கள் என்ற சபாநாயகரின் முடிவு தவறானது.
சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் அளித்த பதிலை முழுமையாக ஆய்வு செய்யாமல் அவசரமாக தகுதிநீக்கம் செய்திருப்பது முற்றிலும் தவறானது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, சபாநாயகர் மற்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆரியமா சுந்தரம், ‘உட்கட்சி பிரச்சினையை கவர்னரிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 18 எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த கடிதத்தின் மீது ஒருவேளை கவர்னர் நடவடிக்கை எடுத்திருந்தால் ஆளுங்கட்சிக்கு எதிராக முடிவுகள் அமைந்திருக்கும். இதன்மூலம் 18 பேரும் கட்சிக்கு எதிராக செயல்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது. முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்று மனு கொடுத்ததாக கூறுகிறார்கள். முதல்-அமைச்சரை கவர்னரால் மாற்ற முடியாது என்று தெரிந்தும் திட்டமிட்டு மனு அளித்துள்ளனர்’ என்று வாதாடினார்.
சபாநாயகர் மற்றும் முதல்-அமைச்சர் தரப்பு வாதம் முடிவடையாததால் விசாரணையை வருகிற 31-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
அன்றைய தினத்துடன் இறுதி வாதம் முடிவடைகிறது என்று நீதிபதி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, அன்றைய தினம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைப்பார் என்று கூறப்படுகிறத