கருணாநிதி நினைவஞ்சலி கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்குமா? ஓ.பன்னீர்செல்வம் பதில்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டபோது நீர்மட்ட உயரத்தை 152 அடி என நிர்ணயம் செய்து, அணை உறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. இடையில் பழுது பார்க்கும் பணி இருப்பதாக கேரள அரசு சொன்னதின் அடிப்படையில் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பல கோடி ரூபாய் செலவில் பராமரிப்பு பணி செய்து முடிக்கப்பட்டது.
2011-ம் ஆண்டு மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து சட்ட போராட்டம் நடத்தியதால் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு பூகம்பமே ஏற்பட்டாலும் முல்லைப் பெரியாறு அணைக்கு சேதம் ஏற்படாது என்று அளிக்கப்பட்ட அறிக்கையால் 136 அடியில் இருந்து 142 அடியாக தண்ணீரை தேக்கி வைத்து கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
முல்லை பெரியாறில் கடந்த 2 ஆண்டுகளாக 142 அடிக்கு நீரை தேக்கி வைத்து இருப்பதால் எந்தவித சேதமும் இல்லை. பேபி அணை, சிற்றணை பராமரிப்பு பணிகள் செய்ய டெண்டர் விடப்பட்டு பொருட்களை கொண்டு சென்றபோது கேரள அரசு அனுமதி தரவில்லை. 2 அணைகளில் இருந்த 200 மரங்களை அப்புறப்படுத்தவும் அனுமதி தரவில்லை.
இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை அதிகமாக பெய்ததால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நல்ல மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. அந்த பெரு வெள்ளம் ஏற்பட்டு நீர்மட்டம் 136 அடியாக உயரும்போது முதல் எச்சரிக்கை மணி அடிக்கப்படும். அதன்படி தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் தொடர்பு கொண்டு செயல்பட்டனர். 138 அடி வந்தபோது 2-வது எச்சரிக்கை வழங்கப்பட்டது. கரையோர மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். 142 அடி நீரை தேக்க தண்ணீர் வந்தபோது கேரள அரசுக்கு தகவல் தரப்பட்டது.
தற்போது கேரள அரசு பழியை நம்மீது போடுகின்றனர். இது தவறானது. 142 அடிக்கு மேல் நீரை தேக்க முடியாத வகையில் செய்யப்பட்டு உள்ளது. முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு 2330 கன அடி நீர் தான் எடுக்க முடியும். அதற்கு மேல் எடுக்க முடியாது. 20 ஆயிரம் கன அடி நீர் வந்தாலும் தமிழகம் 2330 அடி நீர் தான் எடுக்க முடியும். அதற்கு மேல் வரும் மிகை நீரை இடுக்கி அணைக்குத் தான் அனுப்ப வேண்டிய கட்டாய சூழல் உள்ளது.
வருகிற நீர் அளவின் பற்றி கேரள அரசுக்கு நன்றாக தெரியும். தமிழகத்தின் மீது எந்த குறையும் கிடையாது. தற்போது அணையின் நீர்மட்ட உயரத்தை 142 அடியில் இருந்து 139.9 அடியாக குறைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்போம் என்பதால் அளவை குறைத்து உள்ளோம்.
திருச்சி முக்கொம்பு மதகுகள் உருவாக்கப்பட்டு 176 ஆண்டுகள் ஆகின்றன. அதில் பழுது ஏற்பட்டு உள்ளதால் பாதிப்பு இல்லை. முதல்-அமைச்சர் பார்வையிட்டு உள்ளார். விரைவில் உரிய பணிகள் தொடங்கப் படும்.
தி.மு.க. சார்பில் நடைபெற இருக்கும் கருணாநிதி நினைவஞ்சலி கூட்டத்தில் பா.ஜனதா தலைவர் அமித் ஷா பங்கேற்க இருப்பது பற்றி கேட்கிறீர்கள். இதற்கு நாங்கள் என்ன கருத்து சொல்ல முடியும்? நினைவு கூட்டத்தில் கலந்து கொள்வதில் தவறில்லை. அ.தி.மு.க.விற்கு அழைப்பு விடுத்தால் கலந்து கொள்வது குறித்து உயர்மட்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.
6 மாதத்தில் 1 கோடியே 22 லட்சம் உறுப்பினர்களை சேர்த்த ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். உறுப்பினர் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வந்துகொண்டு இருக்கிறது. அ.தி.மு.க. உறுப்பினர்களில் எந்தவொரு உறுப்பினரும் போலி கிடையாது. திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளில் நடக்க உள்ள இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.