முஸ்லிம் அரசியல் அமைப்புடன் ஆர்.எஸ்.எஸ்.சை ஒப்பிட்டு பேசும் ராகுல் பக்குவமற்றவர்; பா.ஜ.க.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் லண்டன் நகரில் பேசும்பொழுது, தோக்லாம் பகுதியில் இன்றும் சீன தலையீடு உள்ளது. தோக்லாம் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட விவகாரம் கிடையாது. இந்த விவகாரத்தினை பிரதமர் மோடி ஒரு நிகழ்ச்சியாக காண்கிறார். அவரால் இந்த விவகாரத்தினை தடுத்து நிறுத்தி இருக்க முடியும் என கூறினார்.
தொடர்ந்து அவர், இந்திய வெளியுறவு துறை மந்திரி விசாவிற்காக அதிக நேரம் செலவிட்டு பணி செய்து வருகிறார். அவருக்கு இதனை தவிர்த்து மேற்கொள்வதற்கு வேறு சிறந்த பணிகள் இல்லை என்றே தெரிகிறது என்றார்.
அதன்பின்னர் அவர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதா நமது சொந்த மக்களையே பிரிக்கிறது. நம்முடைய நாட்டில் அவர்கள் வெறுப்புணர்வை பரப்பி வருகின்றனர். நமது பணி மக்களை ஒன்றிணைத்து நாட்டை முன்னோக்கி அழைத்து செல்ல வேண்டும் என்பது ஆகும். அதனை எப்படி மேற்கொள்ள வேண்டும் என நாம் செய்து காட்டியுள்ளோம் என்று கூறினார்.
அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை, முஸ்லிம் பிரதர்ஹுட் எனும் முஸ்லிம் கொள்கைகளை அடிப்படையாக கொண்ட அரசியல் அமைப்புடன் ஒப்பிட்டு பேசினார்.
இந்த நிலையில், பாரதீய ஜனதாவின் செய்தி தொடர்பு நிர்வாகி சம்பீத் பத்ரா இன்று கூறும்பொழுது, வெளிநாட்டில் இந்தியாவை அவமதித்து வருகிறார் ராகுல் காந்தி. அவரது பேச்சுகள் மன்னிக்க முடியாதவை. அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை, முஸ்லிம் பிரதர்ஹுட் எனும் அரசியல் அமைப்புடன் ஒப்பிடுகிறார்.
அவருக்கு ஏன் ஜனநாயகத்தின் மீது அவ்வளவு வெறுப்பு? ராகுல் காந்திக்கு பிரதமர் மோடியின் மீது வெறுப்பு உள்ளது. நீங்கள் பிரதமர், மோடி, பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை வெறுக்கிறீர்கள். அதனால் பொறுப்பற்ற, பக்குவமற்ற பேச்சுகளை பேசுகின்றீர்கள் என கூறியுள்ளார். ராகுல் காந்தி தனது பேச்சிற்காக லண்டனிலேயே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.