Breaking News
விராட்டின் பத்தாண்டு மிரட்டல் பயணம்

17 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் இரண்டு இரட்டை செஞ்சுரி விளாசியவர், விராட் கோலி. 18 வயதிலேயே ரஞ்சி கிரிக்கெட்டில் அறிமுகமானவர். 19 வயதை தொடுவதற்குள் ஜூனியர் உலக கோப்பையின் வெற்றி கேப்டன் ஆனார்.

22 வயதுக்குள் 50 ஓவர் உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்திருந்தார். 25 வயதுக்குள் கேப்டன் அந்தஸ்து. எந்த கிரிக்கெட் வீரருக்கும் இல்லாத அளவுக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.165 கோடி சம்பாத்தியம் என்று அசாத்திய வளர்ச்சியுடன் நம்மை வியக்க வைத்து வீறுநடை போடுகிறார்.

இதுவரை எழுதப்பட்டு இருக்கும் அவரது வாழ்க்கை பக்கங்களை கொஞ்சம் புரட்டிப் பார்த்தால்…

20 ஆண்டுகளுக்கு முன்பு பிரேம் தனது மகன்கள் விகாஷ், விராட் இரண்டு பேரையும் மேற்கு டெல்லியில் கிரிக்கெட் அகாடமி நடத்தும் பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மாவிடம் சேர்த்து விட்டார். அந்த அகாடமிதான் விராட்டின் திறமையை பட்டை தீட்டிய பட்டறை.

“விராட்டை பார்த்ததுமே மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமானவராக இருப்பதை உணர்ந்தேன். வயதுக்கு மிஞ்சிய திறமை அவரிடம் காணப்பட்டது. அவர் தனது வயது வீரர்களை காட்டிலும் பெரிய வீரர்களுடன் ஆடுவதை குறிக்கோளாக கொண்டிருந்தார். ‘எனது வயது வீரர்களால் என்னை அவுட் ஆக்க முடியவில்லை. மூத்த வீரர்களுடன் விளையாட அனுமதியுங்கள்’ என்று அடிக்கடி சொல்வார். ஆரம்பத்தில் இருந்தே அவரிடம் நிறைய தன்னம்பிக்கை இருந்தது. நீண்ட நேரம் பேட்டிங் செய்ய விரும்புவார். வலை பயிற்சியிலும் கடைசி வீரராகத்தான் வெளியே வருவார். எனது அகாடமியில் பயிற்சி பெறும், பெற்ற வீரர்களிலேயே வித்தியாசமான ஒருவர் யார் என்று கேட்டால் விராட் கோலியை நோக்கித் தான் கையை நீட்டுவேன்” என்கிறார், பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா.

விராட் கோலி எத்தகைய கடினமான சூழலையும் திறம்பட சமாளிக்கும் போராட்ட குணம் கொண்டவர். மன உறுதி மிக்கவர். கிரிக்கெட்டுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.

கிரிக்கெட் மீதான அவரது ஆர்வத்துக்கு ஒரு உதாரணத்தை சொல்லலாம்.

2006-ம் ஆண்டு டெல்லியில் நடந்த ரஞ்சி கிரிக்கெட் ஆட்டம் ஒன்றில் டெல்லி-கர்நாடக அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கர்நாடகா 446 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய டெல்லி அணி 5 விக்கெட்டுகளை மளமளவென இழந்த நிலையில், ‘பாலோ-ஆன்’ ஆபத்தில் இருந்து அந்த அணியை காப்பாற்ற விராட் கோலி போராடினார். 2-வது நாள் முடிவில் அவர் 40 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

மறுநாள் அதிகாலை விராட் கோலியின் வாழ்க்கையில் பேரிடியாக விழுந்தது அவரது தந்தையின் திடீர் மரணம். மாரடைப்பால் அவரது தந்தை பிரேம் மரணம் அடைந்தார். தந்தையின் உடலை பார்த்து கதறி அழுத கோலி சோகத்தில் உறைந்து போனார். அதனால் அவர் 3-வது நாள் ஆட்டத்தை தொடர வரமாட்டார் என்று தான் அனைவரும் நினைத்தனர்.

ஆனால் 3-வது நாள் காலை 7.30 மணி அளவில் வீரர்களின் ஓய்வறையில் கையில் பேட், பேடுடன் நின்று கொண்டிருந்தார். விராட் கோலி. சக வீரர்கள் அவரை ஆச்சரியத்தோடு பார்த்து திகைத்து போனார்கள். அப்போதைய டெல்லி அணியின் கேப்டன் மிதுன் மன்ஹாஸ், ‘விராட் நீ வீட்டுக்கு செல். பேட் செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை’ என்று கூறினார். அதற்கு கோலி தொடர்ந்து பேட் செய்ய விரும்புவதாக கூறினார்.

இளம் வயதில் இப்படியொரு தாங்க முடியாத துயரத்தை மனதில் புதைத்துக் கொண்டு, கோலி ஒரு தேர்ந்த வீரர் போல் விளையாடினார். அவர் 90 ரன்கள் (238 பந்து) எடுத்து ஆட்டம் இழந்தார். அணியை இக்கட்டில் இருந்து மீட்டெடுத்த கோலி அதன் பிறகு நேராக தந்தையின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கோலி வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய நிகழ்வு இது.

அதை பற்றி நினைவுகூரும் கோலி, ‘நான் விளையாடி கொண்டே இருக்க வேண்டும் என்று தான் எனது தந்தை எப்போதும் விரும்புவார்’ என்று சொல்வார்.

விராட் கோலி ஜூனியர், சீனியர் என்று பாகுபாடு பார்ப்பதில்லை. மூத்த வீரர்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பார். பள்ளி விளையாட்டின் போது முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹராவின் கையால் விருது வாங்கியுள்ளார். அப்போது கோலிக்கு வயது 11.

பிற்காலத்தில் கோலியின் தலைமையின் கீழ் நெஹரா விளையாடினார். நெஹராவை தனது குருவாக கருதிய கோலி, கடைசி சர்வதேச போட்டியில் ஆடிய போது அவரை தோளில் சுமந்து சென்று நெகிழ வைத்தார்.

இதே போல் தனது பால்ய கால பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மாவுக்கு காரை பரிசாக அளித்த கோலி, அகாடமிக்கு செல்லும் போதெல்லாம் நிறைய விளையாட்டு உபகரணங்களை தாராளமாக கொடுப்பார்.

கிரிக்கெட்டில் உச்சத்தை நெருங்கி கொண்டிருக்கும் விராட் கோலி டெஸ்டில் அதிக இரட்டை சதம் விளாசிய கேப்டன் (6), ஒரு நாள் போட்டியில் வெற்றிகரமான சேசிங்கில் அதிக சதங்கள் அடித்தவர் (19), தனது தலைமையில் இந்திய அணியை தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடரில் வெற்றி பெற செய்தவர், மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் சராசரியாக 50 ரன்களுக்கு மேல் வைத்திருந்த ஒரே வீரர் என அவரது சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

29 வயதான விராட் கோலி ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 342 ஆட்டங்களில் பங்கேற்று 58 சதம் உள்பட 17 ஆயிரத்து 875 ரன்கள் குவித்துள்ளார். ஒரு நாள் போட்டி, 20 ஓவர் போட்டிகளில் தலா 4 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார்.

2008-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்து தற்போது 10 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை மிரட்டலாக நிறைவு செய்திருக்கும் விராட் கோலி, இதே போன்று மேலும் 10 ஆண்டுகள் விளையாடும் பட்சத்தில் கிரிக்கெட்டில் உள்ள பெரும்பாலான சாதனைகளை தவிடுபொடியாக்கி தன்வசப்படுத்திவிடுவார்.

-ஜெய்பான்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.