அமெரிக்க செனட் உறுப்பினர் ஜான் மெக்கெய்ன் உடல்நல பாதிப்பினால் காலமானார்
அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையின் உறுப்பினராக இருந்தவர் ஜான் மெக்கெய்ன் (வயது 81). இவர் வியட்னாம் போரில் கைது செய்யப்பட்டு வடக்கு வியட்னாமில் போர் கைதியாக சிறையில் இருந்தவர். இதனால் போர் நாயகனாக அறியப்படும் ஜான், கடந்த 2008ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டவர். இந்த தேர்தலில் பராக் ஒபாமாவிடம் அவர் தோல்வி கண்டார்.
இந்த நிலையில், கிளையோபிளாஸ்டோமா எனப்படும் மூளை புற்றுநோயால் இவருக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் தொடர்ந்து ஒரு வருடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதன்பின் கடந்த வெள்ளி கிழமை தனது மருத்துவ சிகிச்சையை நிறுத்தி விட ஜான் முடிவு செய்துள்ளார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜான் மெக்கெய்ன் மரணம் அடைந்து உள்ளார். இதுபற்றி வெளியிடப்பட்டு உள்ள அலுவலக தகவலில், செனட் உறுப்பினர் ஜான் மெக்கெய்ன் 2018ம் ஆண்டு ஆகஸ்டு 25ந்தேதி மாலை 4.28 மணியளவில் காலமானார்.
அவர் மரணம் அடைந்தபொழுது அவருடைய மனைவி சின்டி மற்றும் அவரது குடும்பத்தினர் உடனிருந்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவுக்காக மரணம் அடையும்வரை அவர் 60 ஆண்டுகள் சேவை செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.