அரசு நிலங்களை அபகரித்து வீட்டு மனைகளாக மாற்றுவதை தடுக்க வேண்டும் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் கூறியிருந்ததாவது:-
விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதை தடுக்க ஐகோர்ட்டு பல்வேறு விதிகளை வகுத்துள்ளது. இதன்மூலம் பெரும்பாலான விளைநிலங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
சமீபகாலமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசு நிலங்கள் அபகரிக்கப்பட்டு வீட்டு மனைகளாக மாற்றப்படுவது அதிகரித்து வருகிறது. அரசு நிலங்களை தனிநபர்கள் அபகரிக்க அதிகாரிகளும் துணையாக இருந்து வருகின்றனர்.
ஓசூர் பகுதியில் அதிகாரிகள் துணையுடன் அரசு நிலங்கள் அபகரிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தேன். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, அரசு நிலங்களை அபகரித்து வீட்டு மனைகளாக மாற்றுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், பாஸ்கரன் ஆகியோர், இதுதொடர்பாக கிருஷ்ணகிரி கலெக்டர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். பின்னர், விசாரணையை 27-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.