நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயார் ஆகிறது 3 முக்கிய குழுக்களை அமைத்தார் ராகுல்காந்தி
நாடாளுமன்றத்தின் பதவி காலம் அடுத்த ஆண்டு (2019) மே மாதத்துடன் முடிவடைகிறது.
எனவே அதற்கு முன்னதாக நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. அனேகமாக அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் இப்போதே தொடங்கிவிட்டது. தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிப்பது, பெண்கள் அதிக அளவில் போட்டியிட வழிவகை செய்வது, தேர்தல் செலவை குறைப்பது போன்ற அம்சங்கள் குறித்து தேர்தல் கமிஷன் டெல்லியில் நாளை (திங்கட்கிழமை) அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகளுக்கும், 51 மாநில கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இன்னும் சில மாதங்களே இருப்பதால் அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. கூட்டணி அமைப்பது, வியூகங்கள் அமைப்பது போன்ற பணிகளை கட்சிகள் தொடங்கிவிட்டன.
ஆளும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஒருமித்த கருத்து கொண்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். மற்ற கட்சிகளை விட காங்கிரஸ் முன்கூட்டியே தயாராகி வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கட்சியில் முக்கிய குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, விளம்பர குழு என்ற மூன்று குழுக்களை அமைத்து உள்ளார். இந்த குழுக்களில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் மத்திய மந்திரிகள் உள்ளிட்டோர் இடம்பெற்று இருக்கிறார்கள்.
இதில் 9 பேர் கொண்ட முக்கிய குழுவில் முன்னாள் மத்திய மந்திரிகள் ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம், அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே, அகமது பட்டேல், ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், தலைமை செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். இந்த குழு கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் செயல்படும்.
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், சல்மான் குர்ஷித், சசி தரூர், குமாரி செல்ஜா, பஞ்சாப் மாநில நிதி மந்திரி மன்பிரீத் பாதல், அரியானா முன்னாள் முதல்-மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா, மேகாலயா முன்னாள் முதல்-மந்திரி முகுல் சங்மா, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் கவுடா, பெண்கள் அணியின் தலைவர் சுஷ்மிதா தேவ், பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தலைவர் தம்ரத்வாஜ் சாகு, சச்சின் ராவ், மீனாட்சி நடராஜன், சாம் பிட்ரோடா, ரஜினி பட்டீல், லலிதேஷ் திரிபாதி, பிந்து கிருஷ்ணன், ரகுவீர் மீனா, பாலச்சந்திர முங்கேகர் ஆகிய 19 பேர் இடம்பெற்று இருக்கிறார்கள்.
விளம்பர குழுவில் முன்னாள் மத்திய மந்திரிகள் ஆனந்த் சர்மா, மணிஷ் திவாரி, ராஜீவ் சுக்லா, மக்களவை முன்னாள் உறுப்பினர் பிரமோத் திவாரி, சமூக ஊடக பிரிவின் தலைவர் திவ்யா ஸ்பந்தனா, ரன்தீப் சுர்ஜேவாலா, பக்த சரண் தாஸ், பிரவீண் சக்கரவர்த்தி, மிலிந்த் தியோரா, குமார் கெட்கர், பவன் கேரா, ஜெய்வீர் ஷெர்கில், வி.டி.சதீசன் ஆகிய 13 பேர் இடம்பெற்று உள்ளனர்.
இந்த தகவலை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் அசோக் கெலாட் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
ராகுல் அமைத்த குழுவில் தமிழகத்தில் இருந்து ஒரே தலைவர் ப.சிதம்பரம்
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 3 குழுக்களை அமைத்து உள்ளார். இதில் தமிழ்நாட்டில் இருந்து ப.சிதம்பரம் மட்டுமே இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
அவர் முக்கிய குழு, தேர்தல் அறிக்கை குழு ஆகிய இரு குழுக்களில் இடம் பெற்று உள்ளார்.