விஜய் மல்லையாவுக்கு சிறையில் அதிநவீன வசதிகள்
‘கிங் பிஷர்’ குழும நிறுவனங்களின் தலைவர் விஜய் மல்லையா (வயது 62), இந்திய பொதுத்துறை வங்கிகளில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடன்களை வாங்கி விட்டு, திருப்பி செலுத்தாமல், லண்டனுக்கு தப்பி ஓடி விட்டார். அவர் மீது இந்தியாவில் உள்ள பல்வேறு கோர்ட்டுகளில் சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் வழக்குகளை தொடுத்து உள்ளன.
அவரை நாடு கடத்திக்கொண்டு வந்து வழக்கு விசாரணையை சந்திக்க வைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பான வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, விஜய் மல்லையாவை அடைக்க திட்டமிடப்பட்டு உள்ள மும்பை ஆர்தர் ரோடு சிறை சுகாதார வசதியற்றது என்று அவரது தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும் சிறையில் வசதிகள் செய்து தரப்படும் என இந்தியா அளித்த வாக்குறுதியை நம்ப முடியாது எனவும் கூறப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சிறையில் விஜய் மல்லையாவை அடைக்க உள்ள அறையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள வசதிகளை வீடியோ எடுத்து தாக்கல் செய்யுமாறு இந்தியாவுக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு எம்மா ஆர்புத்நாட் உத்தரவிட்டார்.
அதன்படி விஜய் மல்லையா அடைக்கப்படுகிற மும்பை ஆர்தர் ரோடு சிறையின் 12–ம் எண் கட்டிடத்தில் உள்ள அறைகளில் என்னென்ன வசதிகள் செய்து தரப்படுகின்றன என்பதை 10 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவாக எடுத்து சி.பி.ஐ. தாக்கல் செய்தது.
இதன்படி விஜய் மல்லையாவுக்கு டி.வி. பெட்டி, மேற்கத்திய கழிவறை, மெத்தை, தலையணை, பீங்கான் சாப்பாட்டு தட்டு, 2 கிண்ணங்கள் தரப்படும். சிறை அறைக்குள் சூரிய ஒளி படுகிற வசதி, நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான வசதி, நூலக வசதி செய்து தரப்படுகிறது. மொத்தத்தில் அவருக்கு சிறையில் அதிநவீன வசதிகள் கிடைக்க உள்ளன.
சிறை கட்டிடத்தில் ரகசிய கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன. 24 மணி நேரமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்த வீடியோவை மாஜிஸ்திரேட்டு பரிசீலித்து உத்தரவு பிறப்பிப்பார். அதையடுத்து விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துகிற நடவடிக்கை சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.