சினிமா தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
சினிமா தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாகவும் பெப்சி சார்பில் ஜெயலலிதா பெயரில் படப்பிடிப்பு தளம் கட்ட ரூ.5 கோடி வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) சார்பில் பையனூரில் புதிதாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சினிமா படப்பிடிப்பு தளம் கட்டப்பட்டு உள்ளது. 15 ஏக்கர் பரப்பளவில் இந்த தளம் உருவாகி உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமை தாங்கினார்.
இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு படப்பிடிப்பு தளத்தை திறந்துவைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-
மனிதன் நாகரிகமடைந்து உருவாக்கிய படைப்புகளில் சினிமா மிகவும் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. அரசியலில், திரைப்படத் துறையினரின் ஆதிக்கத்தினை நிலை நிறுத்தியவர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும்தான். திரைப்படத்துறை தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்க ஒவ்வொரு துறைக்கும் ஒரு சங்கங்கள் அமைத்தனர். அந்த வகையில் அமைக்கப்பட்ட 22 சங்கங்கள் இணைந்த ஒரு கூட்டமைப்புதான் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம். எம்.ஜி.ஆர். இந்த அமைப்பை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.
திரைப்படத்துறையில் ஆரம்பகாலத்தில் படப்பிடிப்பு நிலையங்கள் மற்றும் தளங்கள் அதிக அளவில் இருந்தது தமிழ்நாட்டில் தான். தற்பொழுதைய காலமாற்றத்திற்கேற்ப, படப்பிடிப்பு நிலையங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் வெகுவாக குறைந்துவிட்டது. படப்பிடிப்பு தளங்கள் இருந்த இடங்கள் தற்பொழுது குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களாக மாறி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் திரைப்பட கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து, சினிமாத் துறையின் மூலம் சமுதாய நலன் சார்ந்த கருத்துகளை மக்களிடையே விதைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்று சாதித்துக்காட்டிய எம்.ஜி.ஆர். பெயரால் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் உருவாக்கி இருப்பது பாராட்டுக்குரிய செயலாகும்.
110 அடி நீளமும், 100 அடி அகலமும், 56 அடி உயரமும் கொண்ட இந்த படப்பிடிப்புத் தளம் இந்தியாவிலேயே மிக உயர்ந்த படப்பிடிப்பு தளம் என்று அறிவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். சென்னையின் பிற இடங்களிலும், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் இப்படிப்பட்ட படப்பிடிப்பு தளங்களை இந்த அமைப்பு உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அதிக அளவில் படப் பிடிப்பு தளங்கள் உருவாக்கப்படுவதன் மூலம் தமிழ் படத்தயாரிப்பாளர்கள் வெளியிடங்களுக்குச் செல்லாமல் உள்ளூரிலேயே படப்பிடிப்பு நடத்த வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் அவர்கள் தயாரிக்கும் படங்களுக்கான செலவுகள் குறைய வாய்ப்பு ஏற்படுகிறது. இதர மொழிப் படங்களும் இங்குள்ள படப்பிடிப்பு தளங்களில் பயன்படுத்திக்கொள்ள முன்வரும் வாய்ப்பு உருவாகும்.
இதன் மூலம் இங்குள்ள தமிழ் திரைப்படத் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறுவது உறுதிப்படுத்தப்படும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா திரைப்படத் துறைக்கு ஏராளமான திட்டங்களை வழங்கி செயல்படுத்தியுள்ளார். இன்றைக்கு பல தொழிலாளர்கள் வீடு இல்லாமல் இருக்கின்றார்கள். தமிழகத்தை பொறுத்தவரையில், குடிசையில்லா வீடு உருவாக்க வேண்டும் என்று ஜெயலலிதா திட்டம் தீட்டினார்.
அந்தத் திட்டத்தை அம்மாவினுடைய அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது. பல லட்சம் வீடுகளை கட்டித்தருவதற்கு இந்த அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எப்படி வீடு கட்டிக் கொடுக்க வேண்டும், எவ்வாறு உதவி செய்ய முடியும் என்பதையெல்லாம் பரிசீலித்து உங்களுடைய தொழிலாளர்களுக்கும் சட்டப்படி, விரைவாக, உங்களுடைய எண்ணப்படி அம்மாவினுடைய அரசு உங்களுக்கு உதவி புரியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
நானெல்லாம் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். உழைக்கின்றவர்களுக்கு எவ்வளவு கஷ்டம் என்பதை நன்றாகப் புரிந்தவர்கள். பக்கத்திலே ஒரு அரங்கம் கட்டித் தரவேண்டும் என்று ஒரு கோரிக்கையும் வைத்தார்கள். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரிலே அமைக்கப்படுகின்ற அந்த அரங்கிற்கு அம்மாவினுடைய அரசு, அவர் கேட்ட 5 கோடி ரூபாய் நிதியை வழங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
படிப்படியாக உங்களுடைய கோரிக்கைகளையெல்லாம் அம்மாவினுடைய அரசு நிறைவேற்றித் தரும்.”
இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
“எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எடுத்துச்சொன்ன உயர்ந்த கருத்துகளை உயர்ந்த லட்சியங்களை, நீங்கள் உருவாக்குகின்ற திரைப்படங்களில் எடுத்துச்சொன்னால், நல்ல வீடு உருவாகும். நல்ல நாடு உருவாகும். நல்ல சந்ததி உருவாகும். நல்ல இளைய தலைமுறை உருவாகும்.
ஆர்.கே.செல்வமணி பேசியபோது எங்களுக்கு அரசு ஒதுக்கிய இந்த இடத்தில் வீடுகள் கட்டி தருவதற்கு அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
நான் ஏற்கனவே வீட்டு வசதித்துறை செயலாளரை அழைத்து திரைப்படத் தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் வகையில் ஒரு திட்டம் வகுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருக்கிறேன். அவரும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வருகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.”
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
விழாவில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் பேசும்போது, “திரையுலகம் செழிப்பாகும் அறிகுறிகள் தெரிகின்றன. 100 சதவீதம் வெளிப்படையான வசூலை காட்ட ஆசைப்படுகிறோம். அதற்காக டிக்கெட் விற்பனையை கம்ப்யூட்டர் மயமாக்கி வருவாயை எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். திருட்டு சி.டி.யை ஒழிக்க போராடுகிறோம். அரசு உத்தரவு மூலம் இதனை ஒரே நாளில் அகற்ற முடியும்” என்றார்.
விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, பாண்டியராஜன், நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், நடிகை ஸ்ரீப்ரியா, டைரக்டர்கள் பாரதிராஜா, விக்ரமன், பி.வாசு, தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, கதிரேசன், டி.சிவா உள்பட பலர் கலந்துகொண்டனர்.