அனைத்துக்கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை
மக்களவைத் தேர்தல் அடுத்த வருடம் நடக்க இருக்கிறது. இதையடுத்து, டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில், 27-ம் தேதி (இன்று) அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
வாக்குசீட்டு முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்றும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் எழுந்து வரும் கோரிக்கை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வேட்பாளர்களின் செலவு, வேட்பாளர்களின் விளம்பரம் தொடர்பாக பத்திரிகைகளுக்கு கட்டுப்பாடு விதித்தல், ஆன்லைன் பிரச்சாரம் ஆகியவை பற்றி ஆலோசிக்கபடலாம் என தெரிகிறது.
இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள், 51 மாநில கட்சிகள் பங்கேற்கின்றன. திமுக சார்பாக டிகேஎஸ் இளங்கோவன் அதிமுக சார்பாக தம்பிதுரையும் பங்கேற்கின்றனர்.