ஆசிய விளையாட்டு 100 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை டுட்டீ சந்த் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தல்
இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் ஆகிய நகரங்களில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டு திருவிழா விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. போட்டியின் 8-வது நாளான நேற்று இந்தியா தடகளத்தில் 3 வெள்ளிப்பதக்கத்தை உச்சி முகர்ந்து.
ஆசிய கண்டத்தின் அதிவேக பெண்மணி யார்? என்பதை நிர்ணயிக்கும் 100 மீட்டர் ஓட்டம் நேற்றிரவு அரங்கேறியது. இதில் 8 வீராங்கனைகள் மின்னல் வேகத்தில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தனர். பக்ரைன் வீராங்கனை 21 வயதான எடிடியாங் ஒடியாங் 11.30 வினாடிகளில் முதலாவதாக வந்து தங்க மங்கையாக உருவெடுத்தார்.
மயிரிழை வித்தியாசத்தில் பின்தங்கிய இந்திய வீராங்கனை டுட்டீ சந்த் 11.32 வினாடிகளில் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். சீனாவின் யோங்லி வெய்க்கு (11.33 வினாடி) வெண்கலம் கிடைத்தது.
முன்னதாக அரைஇறுதி சுற்றில் 11.43 வினாடிகளில் இலக்கை எட்டி இறுதிப்போட்டிக்கு வந்த டுட்டீ சந்த், இப்போது பதக்கத்தை வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஆனால் டுட்டீ சந்த் தேசிய சாதனையாக 11.29 வினாடிகள் வைத்துள்ளார். அதே வேகத்தில் இங்கு ஓடியிருந்தால் அவரது கழுத்தை தங்கப்பதக்கம் அலங்கரித்து இருக்கும்.
22 வயதான டுட்டீ சந்த் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். பாலின சர்ச்சைகள், இடையூறுகளை கடந்து ஆசிய போட்டிக்குள் முதல்முறையாக நுழைந்த டுட்டீ சந்த், பதக்கத்தோடு நம்மை பெருமைப்படுத்தி இருக்கிறார். ஆசிய விளையாட்டில் 100 மீட்டர் ஓட்டத்தில் 1998-ம் ஆண்டுக்கு பிறகு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற மகிமையையும் அவர் பெற்றுள்ளார்.
பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 50.59 வினாடிகளில் இலக்கை அடைந்து புதிய தேசிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கத்தை சொந்தமாக்கினார். சல்வா நாசெர் (பக்ரைன்) போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கமும் (50.09 வினாடி), கஜகஸ்தான் வீராங்கனை எலினா மிகைனா வெண்கலமும் (52.63 வினாடி) கைப்பற்றினர். மற்றொரு இந்திய வீராங்கனை நிர்மலா ஷெரோன் 4-வது இடத்தை பிடித்து (52.96 வினாடி) ஏமாற்றத்திற்கு உள்ளானார்.
18 வயதான ஹிமா தாஸ், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். 2006-ம் ஆண்டுக்கு பிறகு ஆசிய விளையாட்டில் இந்த பிரிவில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையாக வலம் வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு உலக ஜூனியர் போட்டியில் இவர் தங்கம் வென்று வரலாறு படைத்தது நினைவிருக்கலாம்.
ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்திலும் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிட்டியது. இதன் இறுதி சுற்றில் தொடக்கம் முதலே முன்னிலை வகித்த கத்தார் வீரர் அப்தாலெலா ஹசன் 44.89 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கத்தை தட்டிச்சென்றார். இந்திய வீரர் முகமது அனாஸ் 45.69 வினாடிகளுடன் 2-வது இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்தை தனக்குரியதாக்கினார். பக்ரைன் வீரர் அலி காமிசுக்கு (45.70 வினாடி) வெண்கலப்பதக்கம் கிடைத்தது. தமிழக வீரர் ஆரோக்ய ராஜீவ் 4-வதாக வந்து (45.84 வினாடி) ஏமாற்றம் அடைந்தார்.
கேரளாவைச் சேர்ந்த 23 வயதான முகமது அனாஸ், இந்த பதக்கத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு சமர்ப்பிப்பதாக அறிவித்துள்ளார்.
ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தின் அரைஇறுதியில் தமிழக வீரர்கள் தருண் அய்யாசாமி 49.55 வினாடிகளிலும், சந்தோஷ்குமார் தமிழரசன் 50.46 வினாடிகளிலும் இலக்கை கடந்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இதன்பெண்கள் பிரிவில் இந்தியாவின் அனு ராகவனும், ஜானா முர்முவும் இறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்கள்.
ஆசியாவின் அதிவேக மனிதர் யார் என்பதை நிர்ணயிக்கும் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் சீன வீரர் சூ பிங்டியான் 9.92 வினாடிகளில் புதிய ஆசிய சாதனையுடன் இலக்கை எட்ட, அவரது கழுத்தில் தங்கப்பதக்கம் விழுந்தது.