கேரளாவுக்கு கூடுதல் நிதியுதவி வழங்கப்படும் : பிரதமர் மோடி உறுதி
போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகள் குறித்து, டெல்லியில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து மாநில கவர்னர் சதாசிவம் எடுத்துரைத்தார்.
அப்போது அவரிடம் பேசிய பிரதமர் மோடி, கேரளாவுக்கு தற்போது மத்திய அரசு வழங்கியுள்ள ரூ.600 கோடி, வெறும் முன்பணம் மட்டும்தான் எனவும், மாநிலத்துக்கு மேலும் கூடுதல் நிதியுதவி விரைவில் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார். தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு இந்த நிதி வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.
இதைப்போல உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் சந்தித்த கவர்னர் சதாசிவம், மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு நிலவரம் மற்றும் வெள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். அப்போது, கேரளாவில் சேத விவரங்கள் கண்டறியும் பணிகள் முடிவடைந்ததும் கூடுதல் நிதி வழங்கப்படும் என உள்துறை மந்திரியும் உறுதியளித்தார்.
இந்த தகவல்கள் அனைத்தும் கேரள கவர்னர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.