வெண்கலம் வென்ற தமிழக வீரர் லட்சுமணன் தகுதி நீக்கம்
ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று நடந்த ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் பக்ரைன் வீரர்கள் ஹசன் சானி (28 நிமிடம் 35.54 வினாடி), ஆப்ரஹாம் செரோபின் (29 நிமிடம் 00.29 வினாடி) முறையே முதல் 2 இடங்களை பிடித்தனர். இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் 29 நிமிடம் 44.91 வினாடிகளில் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை வென்றார்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணனின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சிறிது நேரத்தில் அவர் பதக்கம் வென்றது செல்லாது என்று அறிவிக்கப்பட்டதும், அதிர்ச்சிக்குள்ளானார். போட்டியின் போது, ஆடுகளத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட பாதையை விட்டு சற்று விலகி மற்றொரு பாதையில் அவர் கால்பதித்தது கண்டுபிடிக்கப்பட்டதால் சர்வதேச தடகள சம்மேளன விதிகளின்படி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 4-வது இடத்தை பிடித்த சான்கோங் காவ் (சீனா) 3-வது இடத்துக்கு முன்னேறி வெண்கலப்பதக்கத்தை பெற்றார். லட்சுமணனின் தகுதி நீக்கத்தை எதிர்த்து இந்திய தரப்பில் போட்டி அமைப்பு குழுவில் அப்பீல் செய்யப்பட்டது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.