பெண்ணுடன் ஓட்டலில் சிக்கிய ராணுவ அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை
ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைபிள் படையில் மேஜராக பணியாற்றி வரும் லீதுல் கோகாய், கடந்த சில மாதங்களுக்கு முன் காஷ்மீரில் பணியமர்த்தப்பட்டு இருந்தார். அப்போது உள்ளூர் பெண் ஒருவருடன் ஸ்ரீநகரில் உள்ள ஓட்டலுக்கு சென்றார். ஆனால் அந்த பெண்ணை ஓட்டலில் அனுமதிக்காததால், அங்குள்ள ஊழியர்களுடன் இவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், ராணுவ அதிகாரி லீதுல் கோகாயை அழைத்து சென்றனர். பின்னர் அவரிடம் ராணுவம் விசாரணை நடத்தியது. இதில் பணியின் போது அவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதும், கடமையில் அலட்சியமாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ராணுவ நீதி விசாரணைக்குழு தற்போது உத்தரவிட்டு உள்ளது. அவர் ராணுவ கோர்ட்டு விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என தெரிகிறது.
ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகி உள்ள ராணுவ மேஜர் லீதுல் கோகாய்தான், கடந்த ஆண்டு பட்காமில் கல்வீச்சில் இருந்து தப்பிப்பதற்காக இளைஞர் ஒருவரை ராணுவ ஜீப்பில் மனித கேடயமாக கட்டி வைத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.