Breaking News
வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.

இது தொடர்பான ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது. இதுபற்றி ஆலோசனை நடத்துவதற்காக தேர்தல் கமிஷன் டெல்லியில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது. இதில் கலந்து கொள்ளுமாறு அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகளுக்கும், 51 மாநில கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேர்தல் கமிஷனர்கள் சுனில் அரோரா, அசோக் லாவாசா மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கட்சிகளின் பிரதிநிதிகள் தங்கள் கருத்தை தெரிவித்தனர்.

வாக்காளர் பட்டியலை இறுதி செய்வது, வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிப்பது, வேட்பாளர்களின் தேர்தல் செலவு உச்சவரம்பு, தேர்தல் செலவு கணக்கை உரிய காலத்தில் தாக்கல் செய்வது, தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு கட்சிகள் கூடுதல் வாய்ப்பு அளிப்பது போன்ற பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தேர்தல் பிரசாரம் ஓய்ந்த பின்னர் சமூக வலைத்தளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பிரசாரத்தை தடுப்பது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் தேர்தலுக்கு மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்துவது பற்றியும் இந்த கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதி, மின்னணு வாக்குப்பதிவு முறையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், எனவே இனி வரும் தேர்தல்களில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ராஷ்ட்ரீய ஜனதாதளம், தெலுங்குதேசம், தேசியவாத காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம், தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க. ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்களை கிளப்பினார்கள். அவர்களில் பலரும் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

கூட்டத்தில் பேசிய பாரதீய ஜனதா பிரதிநிதி நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு ஆதரவு தெரிவித்தார். இதேபோல் பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம், மற்றும் அ.தி.மு.க., சமாஜ்வாடி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிகளும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்தன.

ஆனால் தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்குதேசம், ஆம் ஆத்மி, மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் இடதுசாரி கட்சிகள் இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

ஆலோசனை கூட்டம் முடிந்த பின் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி நிருபர்களிடம் பேசுகையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை மீது சந்தேகம் இருப்பதால், கூட்டத்தில் கலந்து கொண்ட 70 சதவீதம் கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், இந்த பிரச்சினையில் பாரதீய ஜனதா தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

தேர்தல் பிரசாரத்தின் போது அரசியல் கட்சிகள் செய்யும் செலவுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்றும், வாக்குப்பதிவு நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெற போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அ.தி.மு.க. சார்பில் கூட்டத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், “மின்னணு எந்திரத்துக்கு பதிலாக ஓட்டுச்சீட்டை பயன்படுத்த வேண்டும் என்று அனைத்துக்கட்சிகளும் விரும்பினால் நாங்கள் மறுக்க மாட்டோம். இதில் ஒருமித்த கருத்து வரவேண்டும். மின்னணு எந்திரம்தான் வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் விரும்பினால் அதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை” என்றார்.

மேலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தியதாகவும், தேர்தல் செலவு அனைத்தையும் அரசே ஏற்றுக்கொண்டால் கட்சிகள் அதிகம் செலவு செய்வதை தடுக்க முடியும் என்று யோசனை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

தி.மு.க. சார்பில் கலந்து கொண்ட டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், மின்னணு எந்திர வாக்குப்பதிவு முறையில் நம்பகத்தன்மை குறைந்து வருவதால் ஓட்டுச்சீட்டு முறைக்கு மீண்டும் செல்லலாம் என்ற தி.மு.க.வின் கருத்தை வலியுறுத்தியதாக தெரிவித்தார். தி.மு.க.வைப் பொறுத்தவரை மின்னணு முறையை முன்பு ஆதரித்து பேசி வந்ததாகவும், ஆனால் தற்போது நடைமுறையில் ஓட்டு எண்ணிக்கையில் வித்தியாசம் வருவதால் ஏதோ ஒரு தவறு நடப்பதாக தெரிகிறது என்றும் அவர் கூறினார்.

ஆண்டுக்கு ஒருமுறை வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட வேண்டும் என்றும், மாவட்ட தேர்தல் அதிகாரி என்ற நிலையை மாற்றி சட்டமன்ற தொகுதி வாரியாக அதிகாரிகளை நியமித்தால் வாக்காளர் பட்டியல் குறைபாடுகளை சரிசெய்யலாம் என்று யோசனை தெரிவித்ததாகவும், அரசியல் கட்சிகளின் செலவுக்கு உச்சவரம்பு வைக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் டி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

இதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய மந்திரி வேலுவும், மின்னணு வாக்குப்பதிவு எந்திர முறையை கைவிட்டு, ஓட்டுச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறினார். மேலும், நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியம் ஆகாது என்றும் அவர் தெரிவித்தார்.

தே.மு.தி.க.வைச் சேர்ந்த ஜி.எஸ்.மணி கூறுகையில், மின்னணு எந்திரத்தை தவிர்த்து ஓட்டுச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தியதாக தெரிவித்தார். ஓட்டுக்கு பணம் மற்றும் இலவச பொருட்களை கொடுப்பதை தடுத்தால்தான் தேர்தலை நேர்மையாக நடத்தமுடியும் என்று தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தேர்தலுக்கு முன்னதாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் வழக்கமாக நடைபெறும் ஆலோசனை கூட்டம்தான் இது. கூட்டத்தில் பேசிய சில கட்சிகளின் பிரதிநிதிகள், சில தொகுதிகளில் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் இருந்த எண்ணிக்கையும், யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை காட்டும் எந்திரத்தில் உள்ள எண்ணிக்கையும் வித்தியாசமாக இருந்ததாக கூறி, வாக்குப்பதிவு எந்திரத்தின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார்கள். அவர்களுடைய கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட்டு, குறைபாடுகளை நீக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என்று சில கட்சிகள் கூறியது மோசமான யோசனை ஆகும். அப்படி கொண்டு வந்தால் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது போன்ற முறைகேடுகள் நடைபெறும். எனவே அதை நாங்கள் விரும்பவில்லை.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பதை அறியும் எந்திரங்களில் சில குறைபாடுகள் இருக்கலாம். கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் அந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு ஓ.பி.ராவத் கூறினார்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.