உத்தரகாண்டில் பரிதாபம் நிலச்சரிவில் சிக்கி கர்ப்பிணி உள்பட 7 பேர் சாவு
உத்தரகாண்டின் டெஹ்ரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதில் கோட் கிராமத்தில் வீடு ஒன்றின் மீது நேற்று அதிகாலையில் மண் சரிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த 8 பேரும் உயிரோடு மண்ணில் புதைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனே அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர். இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 10 வயது சிறுமி ஒருவர் காயத்துடன் மீட்கப்பட்டார். அவருக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது
மீதமுள்ள 7 பேரும் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். அவர்களின் உடல் பின்னர் மீட்கப்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும் ஆவர். இதில் ஹன்சா தேவி (வயது 28) என்ற இளம்பெண் கர்ப்பமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த சம்பவம் டெஹ்ரி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.