தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3,558 கோடியை உடனே வழங்க மத்திய அரசிடம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை
தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, டெல்லி சென்று மத்திய நிதி மற்றும் பெரும் நிறுவனங்கள் விவகாரத்துறை மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை என்பதால் மானியங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. பல்வேறு வழக்குகள் காரணமாக தேர்தலை நடத்த முடியவில்லை. 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வார்டுகளின் எல்லையை மாற்றியமைக்கும் பணி நிறைவடைந்த பிறகுதான் உள்ளாட்சி தேர்தலை அறிவிக்கும் நிலைக்கு மாநில தேர்தல் ஆணையம் வரமுடியும்.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தொடரப்பட்டு சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்கள் ஏற்கனவே மத்திய நிதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
எனவே நிலுவையில் உள்ள மானியத்தொகையான ரூ.3,558.22 கோடியை தமிழகத்துக்கு வழங்க மத்திய நிதித்துறையின் அமைச்சகத்துக்கு (செலவீனம்) உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற கோரிக்கை மனு ஒன்றை மத்திய ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித்துறை மந்திரி நரேந்திர சிங் டோமரிடமும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அளித்துள்ளார்.