14 நாட்களுக்கு பின்னர் கொச்சி விமான நிலையம் செயல்பட தொடங்கியது
கேரளாவில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெய்த மழை வெள்ள பாதிப்பு காரணமாக மாநிலமே வெள்ளத்தில் மிதக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. கொச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்குள் மழை வெள்ளம் புகுந்ததால் ரூ.250 கோடிக்கு சேதம் ஏற்பட்டது. மேலும் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்த கட்டிடங்களும், ஓடுபாதையும் சேதம் அடைந்தன. மின்சார வினியோகமும் பாதிக்கப்பட்டது.
இதனை அடுத்து கடந்த 14 நாட்களாக அங்கு மீட்பு பணிகள் துரிதப்பட்டது. தற்போது கொச்சி விமான நிலையத்தை சீரமைக்கும் பணி நிறைவடைந்து உள்ளது. இதனை அடுத்து கொச்சி விமான நிலையம் நேற்று முதல் செயல்பட தொடங்கியது.
நேற்று பிற்பகல் 2 மணிக்கு ஆமதாபாத்தில் இருந்து கொச்சிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்டிகோ விமானம் ஒன்று வந்தது. மேலும் தனியார் விமான நிறுவனங்களும் விமான சேவையை கொச்சியில் இருந்து தொடங்க இருப்பதாக அறிவித்தன.