அசாமில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு
அசாமில் அண்மையில் தேசிய மக்கள் பதிவேடு வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் ஏறத்தாழ 40 லட்சம் பேர் விடுபட்டுள்ளதாக பெரும் சர்ச்சை எழுந்தது. எனினும், இது வரைவு பட்டியல் மட்டுமே இறுதிப்பட்டியல் அல்ல என்று விளக்கம் அளித்த உள்துறை அமைச்சகம், உண்மையான இந்திய குடிமக்கள் பட்டியலில் விடுபட மாட்டார்கள் என்று உத்தரவாதம் அளித்தது.
இதைத்தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேட்டை மேம்படுத்தும் நடைமுறைகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில், அசாம் குடிமக்கள் பதிவேடு பட்டியல் இறுதி வரைவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
இந்த நிலையில், அசாமில் ஆயுதப்படையினருக்கு வழங்கப்படும் சிறப்பு சட்டத்தை (அப்சா) மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து அசாம் அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்த மாநிலவும் பதட்டமான பகுதி என்று அறிவித்து இந்த அறிவிப்பாணை வெளியாகியுள்ளது.
நாட்டில் பிரச்சினைக்குரிய பகுதிகளில் அமல்படுத்தப்படும் ஆயுதப்படை சிறப்பு சட்டமானது, ஆயுதப்படையினருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குகிறது. அதன்படி, பொது ஒழுங்கை பரமாரிக்கும் பொறுப்பு அளிக்கப்படுவதுடன், எவரையும் கைது செய்யவும் எப்பகுதியிலும் சோதனை நடத்தவும் ஆயுதப்படையினருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக அவ்வப்போது சர்ச்சைகளும் எழுப்படுவது குறிப்பிடத்தக்கது.