அடுத்த மாதம் முதல் தபால் வங்கிகள் தொடக்கம்: தபால் வங்கி சேவை குறித்த விழிப்புணர்வு பேரணி
நாடு முழுவதும் உள்ள 650 தபால் அலுவலகக்கிளைகள் மற்றும் 3 ஆயிரத்து 250 அணுகுமுனையங்களில் இந்திய தபால் துறை சார்பில், பேமெண்ட் வங்கிகள் வரும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி முதல் தொடங்கப்படுகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கி வைக்கிறார்.
இந்த வங்கிகள் குறித்து பொதுமக்களிடையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை நகர மத்திய கோட்ட தபால் அலுவலக முதுநிலைக்கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் சென்னையில் நேற்று பேரணிகள் மற்றும் வீதி நாடகங்கள் நடத்தப்பட்டன.
இப்பேரணியை, தியாகராயநகர் தலைமை தபால் அலுவலகத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். இந்த பேரணி இந்தி பிரசார சபா அருகே சென்று நிறைவடைந்தது.
பேரணியின் இடையே டி.ஜி.வைஷ்ணவ கல்லூரி மாணவர்கள் இந்த பேமெண்ட் வங்கியின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள் குறித்து வீதிநாடகம் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பேரணி குறித்து தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறுகையில் ‘கிராமத்தில் வசிக்கும் சாமனிய மக்களுக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தபால் துறை சார்பில் பேமெண்ட் வங்கி தொடங்கப்படுகிறது. இதன் மூலம், கிராம மக்கள் அரசு வழங்கும் மானியங்களை இந்த வங்கி மூலம் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன், மின்கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த வங்கியின் மூலம் பெறலாம்’ என்றார்.
அதேபோல், மயிலாப்பூர் தலைமை தபால் அலுவலகத்திலிருந்து இதேபோன்ற விழிப்புணர்வு பேரணி புறப்பட்டு நாகேஸ்வர ராவ் பூங்கா சென்றடைந்தது.
இந்நிகழ்ச்சியில், சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் ஆர்.ஆனந்த், சென்னை நகர மத்திய கோட்ட அஞ்சல் அலுவலக முதுநிலைக் கண்காணிப்பாளர் அலோக் ஓஜா, சென்னை நகர வடக்கு கோட்ட அஞ்சல் அலுவலக முதுநிலைக் கண்காணிப்பாளர் சித்ரா தேவி, பேமெண்ட் வங்கியின் மேலாளர் நாகவேணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.