சுங்கச்சாவடிகளில் நீதிபதிகள், முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் செல்ல தனிவழி நெடுஞ்சாலைத்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை ஐகோர்ட்டில், எல் அண்டு டி கிருஷ்ணகிரி வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி லிமிட்டெட் நிறுவனத்தின் சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் (விழுப்புரம் மற்றும் சேலம் கோட்டங்களில் உள்ள) பஸ்களுக்கு சுங்கச்சாவடி கட்டணத்தை தராமல் பாக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகளும், முக்கிய பிரமுகர்களும் செல்லும் வாகனங்கள், சுங்கச்சாவடியில் நீண்ட நேரம் காத்துக்கிடக்க வேண்டியதுள்ளது. இது துரதிருஷ்டவசமானது என்று தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ஆஜரான வக்கீலிடம் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சுங்கச்சாவடிகளில் நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் செல்ல தனி வழி எதுவும் இல்லை. இதனால், அவர்களின் வாகனங்கள் பிற வாகனங்களுடன் வரிசையில் 10, 15 நிமிடங்கள் காத்து கிடக்க வேண்டியதுள்ளது.
நீதிபதிகளுக்கான அடையாள சின்னம் வாகனங்களில் இருந்தும், ஓட்டுனர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்த பிறகும் கூட சில சுங்கச்சாவடிகளில் உள்ள ஊழியர்கள் தேவையின்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிரச்சினை செய்கின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எனவே, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் செல்வதற்கு என்று தனியாக ஒரு சிறப்பு வழியை உருவாக்க வேண்டும். இந்த உத்தரவை, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி, அமல்படுத்த வேண்டும்.
அந்த அதிகாரிகள், நாடு முழுவதும் உள்ள எல்லா சுங்கச்சாவடிகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பவேண்டும். அதில், நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வாகனங்களுக்கு செல்வதற்கு என்று தனி வழியை உருவாக்கவேண்டும். இந்த தனி வழியில், வேறு எந்த வாகனங்களையும் செல்ல அனுமதிக்கக்கூடாது. இந்த வழியை நீதிபதிகளும், முக்கிய பிரமுகர்களும் மட்டுமே பயன்படுத்தும் விதமாக இருக்கவேண்டும்’ என்று கூறியிருக்கவேண்டும்.
இதில் ஏதாவது விதிமீறல் இருந்தால், சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடி மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட நபர்கள் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்