தடகளத்தில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 2 தங்கம் 200 மீட்டர் ஓட்டத்தில் டுட்டீ சந்துக்கு வெள்ளிப்பதக்கம்
ஆசிய விளையாட்டு போட்டியில் தடகளத்தில் நேற்று இந்தியாவுக்கு டிரிபிள் ஜம்ப் வீரர் அர்பிந்தர்சிங்கும், ஹெப்டத்லான் வீராங்கனை ஸ்வப்னாவும் தங்கப்பதக்கம் வென்றுத் தந்து வரலாறு படைத்தனர்.
அர்பிந்தர் சிங்
இந்தோனேஷியாவில் நடந்து வரும் 18–வது ஆசிய விளையாட்டு போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. 11–வது நாளான நேற்று தடகளத்தில் இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 3 பதக்கம் கிடைத்தது.
ஆண்களுக்கான மும்முறை நீளம் தாண்டுதலில் (டிரிபிள் ஜம்ப்) இந்திய வீரர் அர்பிந்தர்சிங் 16.77 மீட்டர் நீளம் தாண்டி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். வழங்கப்பட்ட 6 வாய்ப்புகளில் 3–வது முயற்சியில் அவர் இந்த தூரத்தை கடந்தார். உஸ்பெகிஸ்தான் வீரர் ருஸ்லான் குர்பனோவ் வெள்ளிப்பதக்கமும் (16.62 மீ.), சீனாவின் ஷூவ் காவ் வெண்கலப்பதக்கமும் (16.56 மீ.) பெற்றனர். மற்றொரு இந்திய வீரர் ராகேஷ் பாபு 6–வது இடத்துக்கு (16.40மீ.) தள்ளப்பட்டார்.
ஆசிய விளையாட்டு ஆண்கள் டிரிபிள் ஜம்ப்பில் கடந்த 48 ஆண்டுகளில் தங்கப்பதக்கத்தை ருசித்த முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை 25 வயதான பஞ்சாப்பை சேர்ந்த அர்பிந்தர்சிங் பெற்றுள்ளார்.
ஹெப்டத்லானில் சாதனை
ஹெப்டத்லான் என்பது 100 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 200 மீட்டர்ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800 மீட்டர் ஓட்டம் ஆகிய 7 பந்தயங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு பிரிவிலும் குறிப்பிட்ட நேரத்திலோ அல்லது குறிப்பிட்ட மீட்டர் தூரத்திலோ இலக்கை எட்டும் போது அதற்கு ஏற்ப புள்ளிகள் வழங்கப்படும். 7 பந்தயங்கள் முடிவில் யார் அதிக புள்ளிகளை பெறுகிறார்களோ அவர்களுக்கு மகுடம் கிட்டும்.
சவால்மிக்க பெண்களுக்கான ஹெப்டத்லானில் இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் மொத்தம் 6,026 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். உயரம் தாண்டுல், ஈட்டி எறிதலில் முதலிடம் பிடித்த ஸ்வப்னா, கடைசியாக நடந்த 800 மீட்டர் ஓட்டத்தில் 808 புள்ளிகள் பெற்றதும் அவரது கழுத்தில் தங்கப்பதக்க மாலை விழுவது உறுதியானது. அவருக்கு களத்தில் கடும் போட்டி அளித்த சீனாவின் வாங் குயங்லிங் 5,954 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தினார். இன்னொரு இந்திய வீராங்கனை பூர்ணிமா 5,837 புள்ளிகளுடன் 4–வது இடத்தை பெற்று ஏமாற்றம் அளித்தார்.
ஆசிய விளையாட்டில் ஹெப்டத்லானில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற புதிய சரித்திர சாதனையை படைத்திருக்கும் 21 வயதான ஸ்வப்னா மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.
டுட்டீ சந்துக்கு மீண்டும் பதக்கம்
பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தின் இறுதிசுற்றில் 8 வீராங்கனைகள் களம் இறங்கி மின்னல் வேகத்தில் ஓடினர். இதில் இந்திய வீராங்கனை டுட்டீ சந்த் 23.20 வினாடிகளில் இலக்கை அடைந்து வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தினார். பக்ரைன் வீராங்கனை 21 வயதான எடிடியாங் ஒடியாங் 22.96 வினாடிகளில் முதலாவது வந்து தங்கப்பதக்கத்தை கபளீகரம் செய்தார். சீனாவின் யோங்லி வெய் (23.27 வினாடி) வெண்கலப்பதக்கத்தை பெற்றார். 100 மீட்டர் ஓட்டத்திலும் இவர்கள் தான் இதே நிலையில் டாப்–3 இடத்தை பிடித்தது நினைவு கூரத்தக்கது.
100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி நாயகியாக உருவெடுத்த ஒடிசாவைச் சேர்ந்த 22 வயதான டுட்டீ சந்த் தற்போது 200 மீட்டர் ஓட்டத்திலும் தனது பெயரில் மேலும் ஒரு பதக்கத்தை இணைத்துள்ளார்.
நடை பந்தயத்தில் ஏமாற்றம்
பெண்களுக்கான 20 கிலோமீட்டர் நடை பந்தயத்தில் இந்திய வீராங்கனை குஷ்பிர் கவுர் 1 மணி 35.24 வினாடிகளில் 4–வதாக வந்து மயிழையில் வெண்கலப்பதக்கத்தை நழுவவிட்டார். மற்றொரு இந்திய வீராங்கனை சவுமியா பேபி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதன் ஆண்களுக்கான பிரிவில் இந்திய வீரர்கள் இர்பான் கோலாத்தும் தோடி, மனிஷ்சிங் இருவரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
ஆண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தின் தகுதி சுற்றில் இந்திய வீரர்கள் மன்ஜித்சிங் (3 நிமிடம் 50.59 வினாடி) தனது பிரிவில் முதலிடத்தை பிடித்தும், ஜின்சன் ஜான்சன் (3 நிமிடம் 46.50 வினாடி) தனது குரூப்பில் 2–வது இடத்தை பிடித்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். இறுதிப்போட்டி இன்று அரங்கேறுகிறது.
தடகளம் இன்று நிறைவு
இந்த ஆசிய விளையாட்டில் தடகளத்தில் மட்டும் இந்தியா இதுவரை 5 தங்கம் உள்பட 14 பதக்கங்களை அள்ளியிருக்கிறது. தடகள போட்டி இன்று நிறைவு பெறுகிறது. இதற்கிடையே அணிகளுக்கான கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் பேட்டனை பெற்றுக் கொண்டு ஓடிய போது பக்ரைன் வீரர் இடையூறு செய்ததாக இந்திய தடகளம் சம்மேளனம் கொடுத்திருந்த புகாரை போட்டி அமைப்பு குழு நிராகரித்துள்ளது.
6 விரல்களை கொண்ட ஸ்வப்னா
ஹெப்டத்லானில் தங்கப்பதக்கத்தை வென்ற இந்திய வீராங்கனையான மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஸ்வப்னா பர்மன், ஏழ்மையான குடும்ப பின்னணியில் இருந்து தடகளத்திற்குள் நுழைந்தவர். இவருக்கு இரண்டு கால்களிலும் தலா 6 விரல்கள் உள்ளன. வழக்கத்திற்கு மாறான கால் பாதத்தால், ஓடும் போது அவருக்கு காலில் வலி இருந்து கொண்டே இருக்கும். இந்த போட்டியின் போது அவர் கடுமையான பல் வலியாலும் அவதிப்பட்டார். வலியை குறைப்பதற்காக கன்னத்தில் பேன்டேஜ் ஒட்டியிருந்தார். தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் இந்த வேதனைகள் எல்லாம் இப்போது அவருக்கு சுகமான வலியாக மாறியிருக்கிறது.