தலைமை நீதிபதியை கடுமையாக விமர்சனம் செய்ததற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு தங்கதமிழ்செல்வன் மனு
தமிழக கவர்னரிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடிதம் கொடுத்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான தங்கதமிழ்செல்வன் உள்பட 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். அதில் சபாநாயகரின் உத்தரவு சரி என்று தலைமை நீதிபதியும், தவறு என்று நீதிபதி எம்.சுந்தரும் தீர்ப்பு அளித்து இருந்தனர்.
இதையடுத்து தலைமை நீதிபதியை, தங்கதமிழ்செல்வன் கடுமையாக விமர்சனம் செய்தார். தலைமை நீதிபதிக்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்து, ஊடகங்களுக்கு பேட்டியும் அளித்தார்.
அவமதிப்பு வழக்கு
இதையடுத்து தங்கதமிழ்செல்வன் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல்கள் ஸ்ரீமதி, கண்ணன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளுக்கு ஒப்புதல் கேட்டு அட்வகேட் ஜெனரலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த மாதம் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் முன்பு, தங்கதமிழ்செல்வன் ஆஜராகி, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். இதுதொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்யவும் காலஅவகாசம் கேட்டார்.
நிபந்தனையற்ற மன்னிப்பு
இந்த நிலையில், கோர்ட்டு அவமதிப்பு வழக்குகள் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தங்கதமிழ்செல்வன் ஆஜராகவில்லை. அவர் சார்பில் வக்கீல் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், தனது செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும், இந்த செயலுக்காக ஏற்கனவே வருத்தம் தெரிவித்துள்ளதாகவும், எனவே தன் மீதான கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கையை கைவிடவேண்டும் என்றும் தங்கதமிழ்செல்வன் கூறியிருந்தார்.
இந்த மனுவுக்கு, மனுதாரர்கள் ஸ்ரீமதி, கண்ணன் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 27-ந் தேதிக்கு அட்வகேட் ஜெனரல் தள்ளிவைத்தார்.