Breaking News
திண்டுக்கல் என்ஜினீயரை கரம்பிடித்த ஜெர்மனி ஆசிரியை தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது

காதலுக்கு கண் இல்லை என்பது போல, எல்லைகளும் இல்லை. தங்கள் மனதுக்கு பிடித்தவரை நாடுகள், கண்டங்களை கடந்து மணமுடிக்கும் இளையோரை ஒவ்வொரு நாட்டிலும் பார்க்க முடியும். இதற்கு திண்டுக்கல் என்ஜினீயர் ஒருவர் சமீபத்திய உதாரணமாகி இருக்கிறார்.

அங்குள்ள மூக்கன் ஆசாரி சந்துவை சேர்ந்த ஓய்வு பெற்ற வேளாண் துணை இயக்குனர் ராஜசேகர்-விஜயா தம்பதியின் மகனான நவீன்சேகரன் (வயது 31) என்ற அந்த என்ஜினீயர், ஜெர்மனியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கும், டியுப்ளிட்ஸ் பகுதியை சேர்ந்த பென்கார்டு-ஆக்னஸ் ஹெப்ரல் தம்பதியின் மகள் தெரசா ஹெப்ரலுக்கும் (26) இடையே பழக்கம் ஏற்பட்டது. தெரசா ஹெப்ரல், பி.ஏ. (ஜெர்மன்) படித்துவிட்டு அங்குள்ள பல்கலைக்கழகத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

திண்டுக்கல் வந்தனர்

3 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்த இவர்கள், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். வெவ்வேறு மதம், நாடு என பல தடங்கல்கள் இருந்தபோதும், இவர்களின் திருமணத்துக்கு இருவரின் பெற்றோரும் பச்சைக்கொடி காட்டிவிட்டனர். தமிழ் கலாசாரத்தை விரும்பும் தெரசா ஹெப்ரல், தமிழ் முறைப்படியே திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார்.

எனவே கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என சுமார் 35 பேருடன் திண்டுக்கல் வந்தார். பின்னர் திருமணத்துக்கு தேவையான பட்டு வேட்டி, சேலைகள் மற்றும் பொருட்களை அவர்கள் வாங்கி கொண்டனர்.

தாலி கட்டினார்

இதையடுத்து, நேற்று காலை திண்டுக்கல்லில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நவீன்சேகரன்-தெரசாஹெப்ரல் ஆகியோரது திருமணம் தமிழ் முறைப்படி நடந்தது. தெரசா ஹெப்ரலின் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். அப்போது மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மணமக்களை வாழ்த்தினர்.

காதல் திருமணம் குறித்து நவீன்சேகரன் கூறும்போது, ‘தெரசா ஹெப்ரலுக்கு தமிழ் முறைப்படி ஆரத்தி எடுத்து வரவேற்பது, மாலை அணிவிப்பது, நெற்றியில் திலகமிடுதல், விருந்தோம்பல் ஆகியவை மிகவும் பிடித்தமானது. அவர், தமிழில் பேசவும் கற்றுக்கொண்டார். இந்து முறைப்படி எனது ஊரிலேயே திருமணம் செய்துகொள்ளவும் அவர் விரும்பியதால் திண்டுக்கல்லில் திருமணத்தை நடத்தினோம். 2 வாரங்கள் கழித்து மீண்டும் ஜெர்மனிக்கு செல்ல இருக்கிறோம்’ என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.