நீட் தமிழ் வினாத்தாள் குளறுபடி: கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவ கல்விக்கான நீட் நுழைவு தேர்வை 24 ஆயிரம் மாணவர்கள் எழுதினார்கள். இதில் தமிழ் வினாத்தாளில் மொழிபெயர்ப்பு குளறுபடியால் தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண்கள் குறைந்தது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் கம்யூனிஸ்டு எம்.பி. டி.கே.ரங்கராஜன் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் கடந்த 10-ந்தேதி வழங்கிய தீர்ப்பில், ‘மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் தமிழில் கேட்கப்பட்ட 49 கேள்விகள் தவறாக இருந்ததால் ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.மேலும், மறு தரவரிசை பட்டியலை வெளியிடவும் சி.பி.எஸ்.இ.க்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியது. ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு தடை கோரி சி.பி.எஸ்.இ.தரப்பில்சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கூடுதல் மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், நடப்பாண்டு மருத்துவ படிப்புக்கான சேர்க்கை நடைமுறைகள் முடிந்து விட்டன. எனவே, இந்த ஆண்டு எந்த இடைக்கால நிவாரணமும் அளிக்க முடியாது. இனி இதுபோன்று நடைபெறாமல் இருக்க விசாரணை நடத்த தயார் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் செப்டம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.