Breaking News
வெள்ள நிவாரண பணிகளில் நடிகைகள் ரம்யா நம்பீசன், ரீமா, பார்வதி

கேரளாவில் மழை வெள்ளம் வடிந்த நிலையில் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. ஆனாலும் கிராமங்களில் சேறும் சகதியுமாய் இருப்பதாலும், பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்திருப்பதாலும் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள லட்சக்கணக்கான மக்கள் இன்னும் வீடு திரும்பாமலேயே இருக்கிறார்கள்.

அவர்களுக்கு தொண்டு நிறுவனத்தினரும், நடிகர்–நடிகைகளும், அரசு அதிகாரிகளுடன் இணைந்து தினமும் உணவு–உடைகள் வழங்கி வருகிறார்கள். தமிழ், மலையாள படங்களில் முன்னணி கதாநாயகிகளாக இருக்கும் ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், பார்வதி மற்றும் மலையாள நடிகை தர்‌ஷனா ராஜேந்திரன் ஆகியோர் திருவள்ளாவில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் தங்கவைக்கப்பட்டு உள்ளவர்களை நேரில் சந்தித்து தங்கள் சொந்த செலவில் வாங்கி வந்த உணவு, உடைகளை வழங்கினார்கள்.

மலையாள நடிகர்கள் மழை வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபடாமல் உள்ளனர் என்று நடிகர் கணேஷ்குமார் குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘மாநிலம் முழுவதும் வெள்ள நிவாரண பணிகளில் எல்லோரும் ஒற்றுமையாக ஈடுபட்டு உள்ளனர். ஆனால் மலையாள இளம் நடிகர்களும், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் பெரிய நடிகர்களும் எதுவும் செய்யவில்லை. முன்னணி நடிகர்கள் ஒரு படத்துக்கு கோடிக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்கள். நகைச்சுவை நடிகர்கள் 5 நாட்கள் நடிக்க ரூ.35 லட்சமும், சில நடிகர்கள் ஒரு கடையை திறந்து வைக்க ரூ.30 லட்சமும் வாங்குகிறார்கள். அவர்கள் வெள்ள நிவாரணத்துக்கு எந்த பங்களிப்பையும் செய்யவில்லை’’ என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.