Breaking News
மாணவர்களால் தொந்தரவு ஏற்பட்டால் பேருந்தை காவல் நிலையத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும்: போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவு

பேருந்தில் கல்லூரி மாணவர் களால் பயணிகளுக்கு இடையூறு, அச்சுறுத்தல் ஏற்பட்டால், பேருந்தை உடனடியாக அருகே உள்ள காவல் நிலையத்துக்கு ஓட்டிச் செல்ல ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

சென்னையில் நந்தனம், கீழ்ப்பாக்கம், கடற்கரை சாலை உள்ளிட்ட வழித்தடங்களில் மாநகரப் பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் செய்யும் அட்ட காசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சக மாணவிகளை கிண்டல் செய்து கோரஸாக கானா பாடல்களை பாடுவதும், பேருந்தில் தாளம் போட்டு வருவதும் வழக்கமாக நடக்கக்கூடியது. இது மட்டுமின்றி, ‘ரூட் தல’ என்ற பெயரில் அவர்கள் இடையே மோதல் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கும். சமீபகாலமாக அவர்கள் பட்டாக்கத்தியுடன் பேருந்தில் வந்து மிரட்டுகின்றனர். இது பேருந்து பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், வண்ணாரப் பேட்டை அருகே மாநகர பேருந்தில் (57எப்) சென்ற கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்து படிக்கட்டில் கும்பலாக உட்கார்ந்தபடி, சாலையில் தீப்பொறி பறக்க பட்டாக்கத்தியை உரசிக்கொண்டு சென்றனர். பேருந்தில் சென்ற பயணிகளும், சாலையில் உள்ள பொதுமக்களும் இதைப் பார்த்து அச்சம் அடைந்தனர்.

இதுதொடர்பாக கேட்டபோது மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

இந்த சம்பவம் குறித்து முழுமை யாக அறிக்கை தயாரித்து வழங்கு மாறு சம்பந்தப்பட்ட கிளை மேலாளருக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு இடையூறு அல்லது அச்சுறுத்தல் ஏற்படும் சூழ்நிலை உருவானால், பேருந்தை உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு ஓட்டிச் செல்லுமாறு ஓட்டுநர் கள், நடத்துநர்களுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.