ரஷ்யாவிடமிருந்து ஆயுதம் வாங்கினால்.. இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கினால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று இந்தியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சட்ட திருத்தம்:
ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்பு மற்றும் தொழில் நுட்ப தளவாடங்கள் வாங்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும் என்பது அமெரிக்க சட்டம். ஆனால் அமெரிக்க ராணுவ செயலாளர் ஜிம் மாட்டிஸின் முயற்சியினால், அவ்வாறு தளவாடங்களை வாங்கும் நாடுகள் மீதான பொருளாதார தடைகளை நீக்கும் சிறப்பு உரிமை அமெரிக்க அதிபருக்கும், வெளிவிவகாரத் துறை செயலருக்கும் இருக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா கோபம்:
ரஷ்யாவிடம் இருந்து தரையில் இருந்து விண்ணுக்குச் சென்று தாக்கும் வலிமை கொண்ட எஸ் -400 ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இது அமெரிக்காவிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கினால் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று இந்தியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தவறான புரிதல்:
இது தொடர்பாக பென்டகனின் ஆசிய, பசிபிக் பிராந்திய துணைச் செயலர் ராண்டல் ஸ்க்ரிவர் கூறியது: இந்தியா மிகவும் நட்பான நாடுதான். அதற்காக அது எதை செய்தாலும் அமெரிக்கா ஏற்கும் என நினைக்க கூடாது. இது தவறான புரிதலை உருவாக்கும். இந்த விவகாரத்தில் ஆழமான ஆய்வுகளை செய்ய வேண்டியுள்ளது. எனவே இந்தியாவுக்கு விலக்கு அளிக்கப்படுமான என்பதை உடனடியாக கூற முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்திய- அமெரிக்க பிரதிநிகள் சந்திப்பு அடுத்தவாரம் புதுடில்லியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஸ்க்ரிவரின் அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.